/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஓட்டு எண்ணிக்கை முகவர்களுக்கு கலெக்டர் அறிவுரை: குற்ற வழக்கு உள்ளவர்களை நியமிக்க தடை
/
ஓட்டு எண்ணிக்கை முகவர்களுக்கு கலெக்டர் அறிவுரை: குற்ற வழக்கு உள்ளவர்களை நியமிக்க தடை
ஓட்டு எண்ணிக்கை முகவர்களுக்கு கலெக்டர் அறிவுரை: குற்ற வழக்கு உள்ளவர்களை நியமிக்க தடை
ஓட்டு எண்ணிக்கை முகவர்களுக்கு கலெக்டர் அறிவுரை: குற்ற வழக்கு உள்ளவர்களை நியமிக்க தடை
ADDED : மே 30, 2024 11:17 PM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணும் பணிக்கு குற்ற வழக்குகள் உள்ள நபர்களை முகவர்களாக நியமிக்கக் கூடாது என வேட்பாளர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணும் மையத்தில் வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள், கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது.
கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கினார். எஸ்.பி., சமய்சிங்மீனா முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணிக்கை வரும் ஜூன் 4ம் தேதி காலை 8:00 மணிக்கு துவங்குகிறது. ஓட்டு எண்ணும் மையத்தில் சட்டசபை தொகுதி வாரியாகவும் தபால் ஓட்டுகள் எண்ணும் இடம் மற்றும் மின்னணு ஓட்டு பதிவு இயந்திரம் எண்ணும் இடங்களில் வேட்பாளர்கள் சார்பாக முகவர்களை நியமித்து கொள்ளலாம்.
அதன்படி, 14 மேஜைகளில் ஓட்டு எண்ணப்படுவதால், 14 முகவர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மேஜைக்கு ஒரு முகவரும், ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் 15 முகவர்கள் விதம் 90 முகவர்களும், தபால் ஓட்டு சீட்டுகள் 6 மேஜைகளில் எண்ணப்படுவதால் 6 முகவர்கள் நியமித்து கொள்ளலாம். 18 வயதிற்கு மேற்பட்டவர்களை நியமிக்க வேண்டும். நியமிக்கப்பட்ட முகவர்கள் ஓட்டு எண்ணிக்கு துவங்கும் நாளன்று காலை 7:00 மணிக்கு அடையாள அட்டையுடன் ஓட்டு எண்ணும் மையத்திற்கு வரவேண்டும்.
மையத்திற்குள் மொபைல் போன், எலக்ட்ரானிக் வாட்ச் உட்பட எந்த ஒரு எலக்ட்ரானிக் பொருட்களையும் கொண்டு செல்லக் கூடாது. ஓட்டு எண்ணிக்கை முகவர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மேஜையை விடுத்து, அடுத்த மேஜைக்கு பார்வையிட செல்வதோ, அடுத்த சட்டசபை தொகுதிக்கு செல்வதோ கூடாது.
ஓட்டு எண்ணிக்கை தொடர்பாக சந்தேகம் ஏற்பட்டால், மையத்தில் உள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மட்டுமே தங்களது கருத்துக்களை தெரிவித்திட வேண்டும்.
மேலும் குற்ற வழக்குகள் நிறைந்த நபர்களை முகவர்களாக நியமிக்கக் கூடாது. தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வேட்பாளர்கள் பெறும்போது, வேட்பாளருடன் 4 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
ஓட்டு எண்ணிக்கை பணியில் எந்தவொரு சட்டம் ஒழுங்கு பிரச்னையும் ஏற்படாமல் அமைதியாக ஓட்டு எண்ணிக்கை முடித்துத் தருவதற்கு அனைத்து வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
கூட்டத்தில், டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சங்கர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கள்ளக்குறிச்சி லுார்துசாமி, சங்கராபுரம் கீதா, ரிஷிவந்தியம் குப்புசாமி, கெங்கவல்லி கணேஷ், ஆத்துார் பிரியதர்ஷினி, ஏற்காடு ரவிச்சந்திரன், கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வேட்பாளர்கள், முகவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.