ADDED : செப் 29, 2026 03:31 PM
கள்ளக்குறிச்சி: நிலுவை ஊதியத்தையும், மாதந்தோறும் முதல் தேதி ஊதியத்தை வழங்க வலியுறுத்தியும் கிராம ஊராட்சிகளில் கணினி இயக்குபவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
மாநில கிராம ஊராட்சி கணினி இயக்குபவர்கள் நலச் சங்கத்தினர் அளித்த மனு:
மாவட்டத்தில் உள்ள 412 ஊராட்சிகளில் கடந்த 3 ஆண்டுகளாக கணினி இயக்குபவர்களாக பணிபுரிகிறோம். சொத்து, குடிநீர் மற்றும் தொழில் உள்ளிட்ட வரிகளை வசூலித்தல், அதை பதிவேற்றம் செய்தல். டி.என்.பாஸ்., உள்ளிட்ட கணினி சார்ந்த அனைத்து பணிகளையும் செய்வதுடன், கிராம சபை கூட்டங்களில் முக்கிய பங்கு வகிக்கிறோம்.
எங்களுக்கு தனியார் ஏஜன்சி மூலமாக மாத சம்பளமாக 6,500 ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த சம்பளம் மிகவும் காலதாமதமாக மாதம் தோறும் 20ம் தேதி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
குறிப்பாக, பல மாதங்களாக 200க்கும் மேற்பட்ட கணினி இயக்குபவர்களுக்கு பல மாதங்களாக ஊதியம் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது.
இது குறித்து அதிகாரிகளிடம் பல முறை கூறியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதால், மன உளைச்சல் ஏற்பட்டிருப்பதுடன், வாழ்வாதாரம் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
எனவே, ஊதியம் பெறாமல் பணிபுரியும் கணினி இயக்குபவர்களுக்கு உடனடியாக நிலுவைத்தொகையுடன் கூடிய ஊதியத்தை வழங்க வேண்டும், மாதந்தோறும் முதல் தேதியிலேயே ஊதியம் வழங்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
