வறட்சி நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை :சம்பா சாகுபடி கேள்விக்குறியால் கவலை
வறட்சி நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை :சம்பா சாகுபடி கேள்விக்குறியால் கவலை
UPDATED : செப் 29, 2026 04:38 PM
ADDED : செப் 29, 2026 03:42 PM
கச்சிராயபாளையம்: கோமுகி அணையின் நீர் மட்டம் 24 அடி மட்டுமே உயர்ந்துள்ளதால் இந்த ஆண்டு சம்பா சாகுபடி கேள்விக்குறியானதால் நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கச்சிராயபாளையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயமும் அதனைச் சார்ந்த தொழில்களுமே இப்பகுதி மக்களின் முக்கிய வாழ்வாதாரமாக உள்ளது. இப்பகுதியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பெரும்பாலானோர் விவசாய கூலித் தொழில்களையே நம்பியுள்ளனர்.
இங்கு நெல், கரும்பு, மரவள்ளி, மஞ்சள், மக்காச்சோளம், வாழை உள்ளிட்ட பல்வேறு பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். இப்பகுதி விவசாயிகளின் முக்கிய நீர் ஆதாரமாக கல்வராயன்மலையின் அடிவராத்தில் கோமுகி அணை உள்ளது.
இதன் மழு கொள்ளவு 46 அடி ஆகும். கோமுகி அணையின் பழைய பாசனமான கோமுகி ஆற்றில், வடக்கனந்தல் முதல் வேளாக்குறிச்சி வரை 12 அணைக் கட்டுகள் உள்ளன. இந்த அணைக் கட்டுகள் மூலம் 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 43 ஏரிகள் நீராதாரம் பெற்று 6000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறகின்றன.
மேலும் கோமுகி அணையின் புதிய பாசனத் திட்டத்தில், அணையிலிருந்து 8917 மீட்டர் துாரம் கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கால்வாய்கள் மூலம் கச்சிராயபாளையம், வடக்கனந்தல், மாத்துார், மண்மலை, கரடிசித்துார், தாவடிப்பட்டு, செல்லம்பட்டு, மாதவச்சேரி, சிவகங்கை உட்பட பல்வேறு கிராமங்களில் உள்ள 6000 ஏக்கர் விளை நிலங்கள் நேரடியாக பாசன வசதி பெறுகின்றன.
கச்சிராயபாளையம் பகுதியில் கிணற்று பாசன விவசாயிகள் சம்பா, ஆனிகார், மாசிகார் என 3 போகங்களில் நெல் சாகுபடி செய்து வருகின்றனர். கிணறு இல்லாத விவசாயிகள் பலர் கோமுகி அணையிலிருந்து பாசனத்திற்கு திறக்கும் நீரை மட்டுமே நம்பியுள்ளனர்.
இந்த விவசாயிகள் ஆண்டிற்கு ஒரு போகம், சம்பா சாகுபடியை மட்டுமே செய்து வருகின்றனர். ஆண்டுதோறும் அக்டோபர் முதல் தேதியிலிருந்து பிப்ரவரி இறுதி வரை 5 மாதங்களுக்கு சம்பா சாகுபடிக்கு அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை முற்றிலும் பொய்த்துப் போனதால் கல்வராயன்மலை மற்றும் கச்சிராயபாளையம் பகுதிகளில் மழையின் அளவு மிகவும் குறைந்தது.
இதனால், அணைக்கு நீர் வரத்து மிகவும் குறைந்தது. கோடை காலத்தில் கோமுகி அணை ஒரு சொட்டு தண்ணீர் இன்றி முற்றிலும் வறண்டு காணப்பட்டது. பருவ மழை காலமான ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் கல்வராயன்மலையில் அவ்வப்போது பெய்த மழையால் அணைக்கு சிறிதளவு நீர் வரத்து காணப்பட்டது.
அக்டோபர் 1 முதல் அணையிலிருந்து சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படும் நிலையில் தற்போது அணையின் நீர் மட்டம் 24 அடிக்கும் குறைவாகவே உள்ளது. அணைக்கு நீர் வரத்து பெறும் கல்படை, பொட்டியம், மல்லிகைப்பாடி ஆறுகளிலும் நீர் வரத்து முற்றிலும் நின்றது.
சம்பா சாகுபடி பருவம் துவங்கிய நிலையில் கோமுகி அணை நிரம்பாததால் விவசாயிகள் நாற்றங்கால் அமைக்கும் பணிகளையும் துவங்காமல் உள்ளனர். மேலும் கோமுகி அணை இப்பகுதி மக்களின் முக்கிய குடி நீர் ஆதாரமாகவும் உள்ளதால் பல்வேறு கிராமங்களில் குடிநீர் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது.
இதனால், அப்பகுதிகளில் டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. பருவம் தவறி நடவு செய்தால் பயிர்களின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு மகசூலும் பாதிக்கப்படும் நிலை உருவாகி உள்ளது.
எனவே, அரசு சார்பில் கோமுகி அணை விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
