/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சியில் கட்டுப்பாட்டு அறை திறப்பு
/
கள்ளக்குறிச்சியில் கட்டுப்பாட்டு அறை திறப்பு
ADDED : அக் 25, 2025 07:44 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் மழை வெள்ளம் குறித்த புகார் தெரிவிக்க 24 மணி நேரம் செயல்படும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.
கலெக்டர் பிரசாந்த் செய்திக்குறிப்பு:
வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். நீர் நிலைகளுக்கு அருகில் செல்வது மற்றும் ஆற்றில் குளிப்பதை தவிர்க்க வேண்டும்.
இடிமின்னலுடன் கனமழை பெய்யும் போது திறந்த வெளியில் நிற்பதையும், நீர்நிலைகளில் குளிப்பதையும், மரங்கள் மற்றும் உலோக கட்டமைப்புகளின் கீழ் நிற்பதையும் தவிர்க்க வேண்டும். மழை, வெள்ள நீர் தேங்கும் இடங்களில் கால்நடைகளை கட்டி வைக்க கூடாது.
பொதுமக்கள் தங்களது ஆதார், ரேஷன் கார்டு உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை பிளாஸ்டிக் உறைகளில் வைத்து பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும். பேரிடர் காலங்களில், பொதுமக்கள் டார்ச்லைட், மருந்துகள், பால், தண்ணீர் போன்ற அத்தியாவசிய பொருட்களை வைத்திருப்பது அவசியம்.
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில், பேரிடர் கால நடவடிக்கைகள் மேற்கொள்ள 24 மணிநேரமும் செயல்படும் அவசரகால கட்டுப்பாட்டு அறையை 1077 மற்றும் 04151 - 228801 கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
மழை, வெள்ளம் மற்றும் பேரிடர் குறித்த புகார் தெரிவிக்கலாம். புகார் மீது நடவடிக்கை எடுக்க சுழற்சி முறையில் பணியாற்றும் அலுவலர்கள், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
மழை பாதிப்புகளை எதிர்கொள்ளும் வகையில் அனைத்து முன்னேற்பாடு நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

