ரேஷன் அரிசி கடத்தியவர் கைது
திருக்கோவிலுார் டி.எஸ்.பி., பார்த்திபன் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் இரவு 9:00 மணி அளவில் ரோந்து சென்றனர். அரும்பாக்கம் - கனகநந்தல் சாலையில், சந்தேகத்திற்கிடமான வகையில் சென்ற மினி வேனை மடக்கி சோதனை செய்தனர்.
அதில் 15 மூட்டை ரேஷன் அரிசி கடத்திச் செல்லப்பட்டது தெரியவந்தது. விசாரணையில் திருவண்ணாமலை மாவட்டம், சுவலவெட்டி கிராமத்தைச் சேர்ந்த பழனி மகன் வேல்முருகன், 24; என்பவர் கடத்தி வந்தது தெரிந்தது.
அவரை கைது செய்து, அரிசியுடன் வேனை பறிமுதல் செய்த தனிப்படை போலீசார், கள்ளக்குறிச்சி உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு சப் இன்ஸ்பெக்டர் ஞானசேகரனிடம் ஒப்படைத்தனர்.
பெண்ணை தாக்கிய தம்பதி கைது
கச்சிராயபாளையம் அடுத்த சடையம்பட்டு காட்டுகொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சிவஒளி மனைவி ஞானவள்ளி, 41. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி மகன் சிவக்குமார், 56, என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.
நேற்று முன்தினம் காலை தனது நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்றார். அங்கு வந்த சிவக்குமார் தனது மனைவி ஜீவா உடன் சேர்ந்து ஞானவள்ளியை தாக்கினார்.
புகாரின் பேரில் கச்சிராயபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து சிவக்குமார் மற்றும் ஜீவா ஆகியோரை கைது செய்தனர்.
மது விற்ற பெண் கைது
தியாகதுருகம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சபரிமலை நேற்று பிரதிவிமங்கலம் பகுதியில் ரோந்து சென்றார். அப்போது பிரதிவிமங்கலம் காலனி மேற்கு தெருவில் அய்யாவு மனைவி தமிழரசி, 38; என்பவர் தனது வீட்டில் மதுபாட்டில் வைத்து விற்றது தெரிய வந்தது.
அவரை கைது செய்த போலீசார், 10 மது பாட்டில்கள் மற்றும் போதை அதிகரிக்க மதுவில் கலந்து விற்பனை செய்வதற்காக வைத்திருந்த போதை வஸ்துகளை பறிமுதல் செய்தனர். தமிழரசியை சிறையில் அடைத்தனர்.
கிராவல் மண் கடத்திய
லாரி டிரைவர் கைது
கள்ளக்குறிச்சி புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி புவியலாளர் ரகுநாத்குமார் நேற்று தியாகதுருகம் - பல்லகச்சேரி சாலையில் வாகன ரோந்து சென்றார்.
அவ்வழியே சென்ற லாரியை (டி.என்., 69, ஏ. டபுள்யூ., 0367) மடக்கி சோதனை நடத்தியதில் பல்லகச்சேரி சித்தேரியில் இருந்து கிராவல் மண் கடத்தி வந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து ரகுநாத்குமார் தியாகதுருகம் போலீஸ் ஸ்டேஷனில் கொடுத்த புகாரின் படி வழக்கு பதிவு செய்த போலீசார் லாரியை பறிமுதல் செய்து, அதனை ஓட்டி வந்த மலைக்கோட்டாலத்தைச் சேர்ந்த கண்ணன் மகன் வெங்கடேசன்,28; என்பவரை கைது செய்தனர்.
கபடி போட்டியில் மோதல்
3 பேர் மீது வழக்குப் பதிவு
கச்சிராயபாளையம் அடுத்த க.அலம்பலம் கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜன் மகன் கண்ணதாசன், 25. இவர் நேற்று முன்தினம் இரவு அதே பகுதியில் நடந்த கபடி போட்டியை பார்க்க சென்றார். அப்போது அதே பகுதியை சேர்ந்த மகேந்திரன் மகன் பிரேம்குமார், கணேசன் மகன் ஆளவந்தான் ஆகியோர் கண்ணதாசனிடம் தகராறு செய்து, அவரை தாக்கினர்.
புகாரின் பேரில், கச்சிராயபாளையம் போலீசார் பிரேம்குமார், ஆளவந்தான், கவியரசன் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.