/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பயிர் கடன் அளவு நிர்ணய தொழில்நுட்ப குழு கூட்டம்
/
பயிர் கடன் அளவு நிர்ணய தொழில்நுட்ப குழு கூட்டம்
ADDED : அக் 13, 2025 12:23 AM

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் 2026-27ம் ஆண்டில் பயிர் கடன் அளவு நிர்ணயம் செய்ய மாவட்ட அளவிலான தொழில்நுட்ப குழு கூட்டம் நடந்தது.
கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன், விழுப்புரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் ஸ்வர்ணலட்சுமி, வேளாண்மை இணை இயக்குநர் சத்தியமூர்த்தி, துணை இயக்குநர் ஜோதிபாசு, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் சிவக்குமார் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், 2026--27ம் ஆண்டில் கிசான் கடன் அட்டை திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய பயிர் கடனளவு, கால்நடை பராமரிப்பு, மீன் வளர்ப்பு, பட்டுப்பூச்சி வளர்ப்பு, தேனீ வளர்ப்புகளுக்கான நடைமுறை செலவினங்கள் மீதான மூல தன கடன் அளவு, கடன் வழங்கும் காலம், திருப்பி செலுத்தும் காலம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
வேளாண்மைதுறை சார்பில் பயிர் வகைகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கடனுதவி விபரங்கள் தெரிவிக்குமாறும், கரும்பு, நெல், மஞ்சள் உள்ளிட்ட பயிர்களுக்கு வழங்கப்படும் கடன் அளவை உயர்த்தி வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
கல்வராயன்மலைப்பகுதியில் உழவர் உற்பத்தியாளர் மன்றங்கள் மூலமாக தீவன பயிர்களுக்கு வழங்கப்படும் கடன் அளவை அதிகரிக்கவும், புதிதாக பயிரிடப்படும் மிளகு, காபி பயிர் வகைகளுக்கு கடனுதவி வழங்க கலெக்டர் பிரசாந்த் அறிவுறுத்தினார்.