/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
'பெஞ்சல்' புயல் நிவாரணத் தொகை... ரூ.49.01 கோடி; விவசாயிகள் வங்கி கணக்கில் நேரடி வரவு
/
'பெஞ்சல்' புயல் நிவாரணத் தொகை... ரூ.49.01 கோடி; விவசாயிகள் வங்கி கணக்கில் நேரடி வரவு
'பெஞ்சல்' புயல் நிவாரணத் தொகை... ரூ.49.01 கோடி; விவசாயிகள் வங்கி கணக்கில் நேரடி வரவு
'பெஞ்சல்' புயல் நிவாரணத் தொகை... ரூ.49.01 கோடி; விவசாயிகள் வங்கி கணக்கில் நேரடி வரவு
ADDED : மார் 07, 2025 06:29 AM

கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பிரதான தொழில் விவசாயம். இதில் நடப்பாண்டில் உளுந்து, நெல், கரும்பு, மக்காசோளம், பருத்தி, நிலக்கடலை உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் மொத்தம் ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 719 ஹெக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டிருந்தது.
அதேபோல தோட்டக்கலை பிரிவில் பழங்கள், காய்கறிகள், மலைப்பயிர்கள், பூச்செடிகள், சவுக்கு உள்ளிட்டவைகள் மொத்தம் 25 ஆயிரத்து 159 ஹெக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டன.
பெஞ்சல் சேதம்
கடந்த டிசம்பரில் 'பெஞ்சல்' புயல் மழை காரணமாக கோமுகி, மணிமுக்தா, சாத்தனுார் உள்ளிட்ட அணைகள் நிரம்பி ஆறுகளின் வழியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டதால், மாவட்டம் முழுவதும் மற்றும் எல்லைப்பகுதியான மூங்கில்துறைப்பட்டு, திருக்கோவிலுார் உள்ளிட்ட பகுதிகளில் விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்து பெரும் சேதம் ஏற்பட்டது. பயிர் சேதம் தொடர்பாக வேளாண் மற்றும் தோட்டக்கலை துறை அலுவலர்கள், அந்தந்த கிராம வி.ஏ.ஓ.,க்களுடன் இணைந்து கணக்கெடுப்பு பணியை மேற்கொண்டனர்.
அறிக்கை சமர்பிப்பு
இதில் வேளாண் பயிர்களில், 71 ஆயிரத்து 902 விவசாயிகளின், 30 ஆயிரத்து 798 ஹெக்டர் பரப்பிலான பயிர்கள் சேதமடைந்தது தெரிய வந்தது. அதேபோல, தோட்டக்கலை பயிர்களில், 12 ஆயிரத்து 678 விவசாயிகளின், 8 ஆயிரத்து 695 ஹெக்டர் பரப்பிலான பயிர்கள் சேதமடைந்திருந்ததும் தெரிந்தது. மொத்தம், 84 ஆயிரத்து 580 விவசாயிகளின், 39 ஆயிரத்து 493 ஹெக்டர் பரப்பிலான பயிர்களுக்கு நிவாரண நிதி வழங்க, மாவட்டம் நிர்வாகம் சார்பில் தமிழக அரசிடம் அறிக்கை அளிக்கப்பட்டது.
வங்கிக்கணக்கில் வரவு
இதைத்தொடர்ந்து மாவட்டத்தில் 'பெஞ்சல்' புயலால் பாதிப்படைந்த, 84 ஆயிரத்து 580 விவசாயிகளின், 39 ஆயிரத்து 493 ஹெக்டர் பரப்பளவிலான பயிர் சாகுபடி நிலங்களுக்கு அரசு சார்பில் நிவாரணமாக மொத்தம் ரூ.49 கோடியே ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 90 ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
தற்போது இந்த நிவாரண நிதி துறை வாரியாக பிரிக்கப்பட்டு, விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் அடுத்த பருவத்திற்கான சாகுபடி பணிகளை துவக்கி வருகின்றனர்.