ADDED : டிச 01, 2025 05:07 AM

தியாகதுருகம்: தியாகதுருகம் புறவழிச் சாலை சந்திக்கும் இடத்தில் எச்சரிக்கைக்காக அமைக்கப்பட்ட சிக்னல் விளக்கு கம்பம் சேதமடைந்து பல மாதமாகியும் சீரமைக்காததால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
தியாகதுருகம் நகரின் மேற்கே கள்ளக்கறிச்சி - திருக்கோவிலுார் சாலையை இணைக்கும் வகையில் கடந்த 6 மாதங்களுக்கு முன் புறவழி சாலை அமைக்கப்பட்டது.
திருக்கோவிலுார் சாலையில் செல்லும் வாகனங்கள் தியாகதுருகம் நகருக்குள் செல்லாமல் வலது புறமாக திரும்பி புறவழிச் சாலை வழியாக செல்ல வேண்டும். இச்சாலை சந்திக்கும் இடத்தில் வாகனங்களின் வேகத்தை குறைக்க வேகத்தடையும், சோலார் மின்சக்தியில் இயங்கும் எச்சரிக்கை விளக்கு பொருத்தப்பட்ட கம்பம் அமைக்கப்பட்டுள்ளது.
இது சில மாதங்களுக்கு முன் வாகனம் மோதி கம்பம் சேதம் அடைந்து சாய்ந்தது. இதனால் இச்சாலை சந்திப்பில் வேகமாக செல்லும் வாகனங்கள் இரவு நேரத்தில் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
வாகன ஓட்டிகளின் பாதுகாப்புக்காக இங்கு ஹை மாஸ் விளக்கு அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் எச்சரிக்கை லைட் கம்பம் சேதம் அடைந்ததால் விபத்து ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது.
உடனடியாக இதனை சீரமைத்து எச்சரிக்கை விளக்கு எரிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

