/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மேம்பால பணி நடைபெறும் இடத்தில்... அபாயம்: ரிப்ளக்டர்கள் அமைக்க நடவடிக்கை தேவை
/
மேம்பால பணி நடைபெறும் இடத்தில்... அபாயம்: ரிப்ளக்டர்கள் அமைக்க நடவடிக்கை தேவை
மேம்பால பணி நடைபெறும் இடத்தில்... அபாயம்: ரிப்ளக்டர்கள் அமைக்க நடவடிக்கை தேவை
மேம்பால பணி நடைபெறும் இடத்தில்... அபாயம்: ரிப்ளக்டர்கள் அமைக்க நடவடிக்கை தேவை
ADDED : நவ 22, 2025 04:53 AM

கள்ளக்குறிச்சி: இந்திலி கிராமத்தில் புறவழிச்சாலை மேம்பால பணிகள் நடைபெறும் இடத்தில் விபத்து அபாயம் உள்ளது. அப்பகுதியில் 'ஹைமாஸ் லைட்', 'ரிப்ளக்டர்கள்' மற்றும் எச்சரிக்கை பலகைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உளுந்துார்பேட்டை - சேலம் வரை 136 கி.மீ., தொலைவிலான நான்கு வழி புறவழிச்சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. புறவழிச்சாலையை ஒட்டியவாறு உள்ள கிராமங்களுக்கு செல்வதற்காக சாலையின் குறுக்கே ஆங்காங்கே இடைவெளி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது, போக்குவரத்து அதிகம் உள்ள பகுதிகள் மற்றும் அடிக்கடி விபத்து ஏற்படும் இடங்களில் புதிதாக மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதன்மூலம் புறவழிச்சாலையை ஒட்டியவாறு உள்ள கிராமங்களுக்குச் செல்லும் வாகனங்கள் சாலை இடதுபுறம் வழியாகவும், பெருநகரங்களுக்கு செல்லும் வாகனங்கள் மேம்பாலத்தின் மீதும் செல்லும்.
அதன்படி, கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி கிராமத்தில் பஸ் நிறுத்தம் அருகே புதிதாக மேம்பால கட்டும் பணி சில மாதங்களுக்கு முன் துவங்கியது. மேம்பாலம் பணி நடைபெறும் போது, அப்பகுதியில் போக்குவரத்து இடையூறு ஏற்படாமல் இருக்க சாலையின் இருபுறமும் விரிவாக்கம் செய்து, ஜல்லி, மண் கொட்டி சமன்படுத்தி தார் போடப்பட்டது.
தற்போது, மேம்பால பணிகள் தொடங்க உள்ளதால், போக்குவரத்து (டைவர்ஷன்) மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதாவது, புறவழிச்சாலையில் செல்லும் வாகனங்கள் இந்திலி பகுதியில் 1 கி.மீ., தொலைவிற்கு இடதுபுற சாலையில் இறங்கிச் செல்ல வேண்டும். மேலும், புறவழிச்சாலையின் குறுக்கே மண்கொட்டி தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இரவு நேரங்களில் அப்பகுதியில் 'ஹைமாஸ் லைட்' இல்லாததால் இந்திலி பகுதி முழுவதும் கும்மிருட்டாக உள்ளது. மேலும், சாலை பணிகள் நடைபெறுகிறது என்பதை வாகன ஓட்டிகளுக்கு தெரியப்படுத்தும் வகையில் போதுமான எச்சரிக்கை பலகைகள் அமைக்கப்படவில்லை.
புறவழிச்சாலையில் அதிவேகமாக செல்லும் வாகனங்கள் திடீரென ஏற்படுத்தப்பட்டுள்ள தடுப்பினால் அச்சமடைந்து, வாகனங்களை திருப்புகின்றனர். இதனால் விபத்து ஏற்படுகிறது.
கோயம்புத்துாரில் இருந்து 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்னைக்கு புறப்பட்ட தனியார் சொகுசு பஸ், நேற்று அதிகாலை 3:00 மணியளவில் இந்திலியில் புறவழிச்சாலையின் நடுவே ஏற்படுத்தப்பட்டுள்ள மண் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. நல்வாய்ப்பாக பஸ் பயணிகளுக்கு காயம் ஏற்படவில்லை.
எனவே, இந்திலி புறவழிச்சாலையில் மேம்பாலம் பணிகள் நடைபெறும் இடத்தில் 'ஹைமாஸ் லைட்' அமைக்க வேண்டும். மேலும், சாலைப் பணிகள் நடப்பதை வாகன ஓட்டிகளுக்கு தெரியப்படுத்தும் வகையில் சுமார் ஒரு கி.மீ., தொலைவிற்கு முன் எச்சரிக்கை பலகைகள் மற்றும் ரிப்ளக்டர்கள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

