/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
உணவுதேடி வரும் வன விலங்குகள் உயிரிழப்பது... அதிகரிப்பு; வனப்பகுதிக்குள் நிரந்தர காடு அமைக்க வலியுறுத்தல்
/
உணவுதேடி வரும் வன விலங்குகள் உயிரிழப்பது... அதிகரிப்பு; வனப்பகுதிக்குள் நிரந்தர காடு அமைக்க வலியுறுத்தல்
உணவுதேடி வரும் வன விலங்குகள் உயிரிழப்பது... அதிகரிப்பு; வனப்பகுதிக்குள் நிரந்தர காடு அமைக்க வலியுறுத்தல்
உணவுதேடி வரும் வன விலங்குகள் உயிரிழப்பது... அதிகரிப்பு; வனப்பகுதிக்குள் நிரந்தர காடு அமைக்க வலியுறுத்தல்
ADDED : ஜூலை 22, 2025 01:15 AM

கள்ளக்குறிச்சி மாவட்டம் மிக பெரிய அளவிலான வனப்பகுதியை உள்ளடக்கியுள்ளது. இதில், ரிஷிவந்தியம், உளுந்துார்பேட்டை, வாணவரெட்டி, கருந்தலாக்குறிச்சி உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்த காப்புக்காடுகளில் மான், குரங்கு, காட்டுப்பன்றி, மயில், பாம்பு, உடும்பு, முயல் உள்ளிட்ட வனவிலங்குகள் இருந்தன. விலங்குகளின் உணவு தேவையை பூர்த்தி செய்யும் வகையில் வனப்பகுதிக்குள் பழ மரங்கள் வளர்க்கப்பட்டு, தண்ணீருக்காக குட்டைகள் வெட்டப்பட்டன.
கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்த காப்புக்காடுகள் முழுதும், வனத்தோட்ட கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
வனத்தோட்ட கழகத்தினர், வனப்பகுதியில் இருந்த பழ மரங்கள், குட்டைகளை அழித்து வியாபார நோக்கத்தில் யூகலிப்டஸ் மரங்களை வளர்க்க துவங்கினர்.
மரங்கள் நன்கு வளர்ந்ததும் அறுவடை செய்து, தொழிற்சாலைக்கு அனுப்புவதன் மூலம் அரசுக்கு கனிசமான வருவாய் கிடைக்கிறது. மாவட்டத்தில் சுமார் 20 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் மரங்கள் வளர்க்கப்படுகிறது.
பழமரங்கள் அழித்து யூகலிப்ட்ஸ் மரங்கள் வளர்ப்பால், வனப்பகுதியில் வசிக்கும் வனவிலங்குகளின் உணவு தேவை கேள்விக்குறியானது.
வனப்பகுதியில் வசிக்கும் காட்டுப்பன்றி, மான், மயில் உள்ளிட்ட வனவிலங்குகள் உணவுக்காக, அருகில் உள்ள விளை நிலங்களை நோக்கி படையெடுக்கிறது.
இதனால் பயிர்களை சேதமாக்குகிறது. விவசாயிகளுக்கும் பெரும் நஷ்டம் ஏற்படுகிறது.
வன விலங்குகளிடமிருந்து பயிரை காப்பாற்ற சட்டத்திற்கு புறம்பாக மின்வேலி அமைத்தல், பயிரில் குருணை (விஷம்) மருந்து வைத்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்படுகின்றனர்.
வனப்பகுதியை விட்டு வெளியே வரும் விலங்குகள், மின் வேலியில் சிக்குதல், கிணற்றில் விழுதல், நாய் கடித்தல், வாகனங்களில் சிக்குதல் உள்ளிட்ட காரணங்களால் இறப்பது தொடர்கதையாக உள்ளது.
குரங்குகள் சாலையோரத்திலும், அருகில் உள்ள கிராமப்புறங்களிலும் சுற்றி திரிவதுடன் அப்பகுதி மக்களை அச்சுறுத்துகின்றன. விளைநிலங்களில் சுற்றித்திரியும் மான், காட்டுபன்றி, மயில், முயல் உள்ளிட்ட விலங்குகளை சிலர் வேட்டையாடி, விற்பனை செய்கின்றனர். இதற்காக, உரிமம் இல்லாத துப்பாக்கிகளை பலர் வனப்பகுதியினுள் பதுக்கி வைத்துள்ளனர்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் இருந்த வனவிலங்குகளின் எண்ணிக்கையில், தற்போது 50 சதவீதமாக குறைந்து விட்டது. குறிப்பாக மான்கள் அதிகளவு அழிந்து விட்டன.
வனவிலங்குகளை வேட்டையாடுபவர்கள் மீது பெயரளவுக்கு மட்டுமே நடவடிக்கை எடுப்பதாக புகார் எழுந்துள்ளது.
எனவே, வனவிலங்குகளின் நலன் கருதி வனப்பகுதியின் மொத்த பரப்பளவில், குறிப்பிட்ட அளவு இடத்தை ஒதுக்கி மனித நடமாட்டமில்லாத நிரந்தர காடு அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் மட்டுமே எஞ்சியிருக்கும் வனவிலங்குகளை காப்பாற்ற முடியும்.