/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வளர்ச்சி திட்ட பணிகள் : கலெக்டர் ஆலோசனை
/
வளர்ச்சி திட்ட பணிகள் : கலெக்டர் ஆலோசனை
ADDED : ஏப் 06, 2025 07:36 AM

கள்ளக்குறிச்சி : மாவட்டத்தில் செயல்படுத்தப்பட உள்ள, புதிய திட்டங்கள் மீதான கருத்துருக்களை அலுவலர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் வழங்க, கலெக்டர் பிரசாந்த் உத்தரவிட்டார்.
மாவட்டத்தில், மாநில திட்டக்குழு மூலம் வளமிகு வட்டார வளர்ச்சி திட்டத்தில் நடப்பு நிதியாண்டில் செயல்படுத்த உள்ள புதிய திட்டங்கள் குறித்த ஆலோசனை கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவுப்பொருட்கள் வழங்குதல், மாணவர்களின் தேர்ச்சி விகித்தை அதிகரித்தல், இடை நிற்றலை முற்றிலுமாக குறைத்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மேலும் கல்வராயன்மலையில் கால்நடைகளுக்கான ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்துதல், தியாகதுருகத்தில் தீவன உற்பத்தி நிலையம் அமைத்தல் மற்றும் கிடாரி கன்றுகள் வழங்குதல் குறித்த ஆலோசனை நடந்தது.
தொடர்ந்து நடப்பு நிதியாண்டில், செயல்படுத்தப்பட உள்ள புதிய திட்டங்கள் மீதான கருத்துருக்களை தயார் செய்து விரைவாக மாவட்ட நிர்வாகத்திடம் வழங்க அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
இதில் வேளாண் இணை இயக்குனர் சத்தியமூர்த்தி, திட்டக் குழு அலுவலர் இளங்கோவன், கால்நடைத் துறை உதவி இயக்குனர் கந்தசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.