/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சட்டசபையில் புதிய அறிவிப்பு இல்லாததால் ஏமாற்றம்! பணிச்சுமையால் தவிக்கும் மாவட்ட போலீசார்
/
சட்டசபையில் புதிய அறிவிப்பு இல்லாததால் ஏமாற்றம்! பணிச்சுமையால் தவிக்கும் மாவட்ட போலீசார்
சட்டசபையில் புதிய அறிவிப்பு இல்லாததால் ஏமாற்றம்! பணிச்சுமையால் தவிக்கும் மாவட்ட போலீசார்
சட்டசபையில் புதிய அறிவிப்பு இல்லாததால் ஏமாற்றம்! பணிச்சுமையால் தவிக்கும் மாவட்ட போலீசார்
ADDED : மே 05, 2025 05:51 AM

கடந்த, 2019ம் ஆண்டு கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டது. உடன், கலெக்டர், எஸ்.பி., உட்பட பல்வேறு அரசு துறை சார்ந்த மாவட்ட அலுவலகங்கள் நகரில் ஆங்காங்கே அமைக்கப்பட்டன.
மாவட்டமான பிறகு, தலைநகரான கள்ளக்குறிச்சியில் ஆர்ப்பாட்டம், முற்றுகை, மறியல், விழிப்புணர்வு ஊர்வலம், அரசியல் பொதுக்கூட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் அதிகமாக நடந்து வருகிறது.
குறிப்பாக, திங்கட்கிழமை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் குறைகேட்பு கூட்டத்திற்கு பொதுமக்கள் பலர் மனு அளிக்க வருகின்றனர்.
இதுபோன்ற நிகழ்ச்சிகள், கூட்டங்களில் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை கருதி போலீசார் பலர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர்.
கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் என 79 பேர் பணியில் இருக்க வேண்டும். ஆனால், 50 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் கோர்ட் உள்ளிட்ட அயல் பணிகளுக்கு சென்று விடுகின்றனர்.
சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படும் போது போதிய போலீசார் இல்லாத நிலை ஏற்படுகிறது. இதனால் ஏற்படும் பணிச்சுமையால் போலீசார் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.எனவே, கள்ளக்குறிச்சியில் புதிதாக தாலுகா போலீஸ் நிலையம் அமைக்க வேண்டும். புதிய கலெக்டர் அலுவலகம் வீரசோழபுரத்தில் அமைய உள்ளதால், தியாகதுருகம் போலீஸ் நிலையத்தில், 25 போலீசார் இருக்க வேண்டிய இடத்தில், 19 பேர் மட்டுமே பணியில் உள்ளனர்.
இதனால், கூடுதல் போலீசாரை பணியமர்த்த வேண்டும். கல்வராயன்மலையில் சேராப்பட்டை தலைமையிடமாகக் கொண்டு புதிய போலீஸ் நிலையமும், சங்கராபுரத்தை தலைமையிடமாக கொண்டு புதிய காவல் உட்கோட்டமும் அமைக்க வேண்டும்.பாதுகாப்பு பணிக்காக வரும் வெளி மாவட்ட போலீசார் தங்க மண்டபம் கட்ட வேண்டும் என போலீசார் நீண்ட ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இது தொடர்பாக சட்டசபை கூட்டத்தொடரில் புதிய அறிவிப்புகள் வெளியாகும் என ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர்.
ஆனால், களமருதுாரில் புதிய போலீஸ் நிலையம் அமைக்கப்படும். உளுந்துார்பேட்டையில் புதிய போலீஸ் நிலைய கட்டடம் கட்டப்படும் என்ற 2 அறிவிப்புகள் மட்டுமே வெளியானது.
மாவட்ட தலைநகரான கள்ளக்குறிச்சிக்கு எவ்வித புதிய அறிவிப்பும் இல்லாததால் போலீசார் ஏமாற்றமடைந்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், 'சட்டசபை கூட்டத்தொடரில் கள்ளக்குறிச்சியில் புதிய புறநகர் பஸ் நிலையம், சின்னசேலத்தில் தொழில் பூங்கா, அணைகள் புனரமைப்பு என பல்வேறு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.ஆனால், போலீஸ் துறையில் பாரபட்சமாக, 2 அறிவிப்புகள் மட்டுமே வெளியாகியுள்ளது. கள்ளக்குறிச்சி நகராட்சி எல்லை விரிவுபடுத்தப்பட உள்ளது.
ஏமப்பேர் அருகே புதிய புறநகர் பஸ் நிலையமும், வீரசோழபுரத்தில் கலெக்டர் அலுவலகமும் அமைந்து விட்டால் போலீசாருக்கு மேலும் பணிச்சுமை அதிகரிக்கும். எனவே, கள்ளக்குறிச்சி மற்றும் தியாகதுருகம் போலீஸ் நிலையங்களில் போலீசாரின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும்' என்றனர்.