/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஓட்டு எண்ணிக்கை குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் ஆலோசனை
/
ஓட்டு எண்ணிக்கை குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் ஆலோசனை
ஓட்டு எண்ணிக்கை குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் ஆலோசனை
ஓட்டு எண்ணிக்கை குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் ஆலோசனை
ADDED : மே 25, 2024 01:08 AM

கள்ளக்குறிச்சி: லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணும் பணிகள் மேற்கொள்ளும் அலுவலர்கள், பணியாளர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்த பணிகளை சிறப்புடன் மேற்கொள்ள வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தினார்.
கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணிக்கை குறித்து அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
கூட்டத்திற்கு, மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கி பேசியதாவது:
கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதிக்குட்பட்ட 6 சட்டசபை தொகுதியில் பதிவான மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் ஓட்டு எண்ணும் மையான சின்னசேலம் அடுத்த அ.வாசுதேவனுார் மகாபாரதி பொறியியல் கல்லுாரியில் வைக்கப்பட்டுள்ளது.
வரும் ஜூன் 4 ம் தேதி காலை 8:00 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை துவங்குகிறது. ஓட்டு எண்ணிக்கை நடைபெறுவதை உறுதி செய்வதற்கு ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு மத்திய அரசு பணியாளர் ஒருவர் நுண் பார்வையாளராக (மைக்ரோ அப்சர்வர்) நியமிக்கப்படுவர்.
உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தங்களது சட்டசபை தொகுதிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ஓட்டு எண்ணும் அலுவலர்கள் ஓட்டு எண்ணும் மேஜைக்கு செல்வதை உறுதி செய்து கொள்ள வேண்டும். ஓட்டு எண்ணிக்கை துவங்கும் முன் ஓட்டுகளின் ரகசியத்தை காப்பது தொடர்பாக அலுவலர்கள் அனைரும் உறுதிமொழி ஏற்றுக் கொள்ள வேண்டும்.
காலை 8:00 மணிக்கு தபால் ஓட்டுகள் எண்ணும் பணிகள் துவங்கும். அனைத் தொடர்ந்து 8:30 மணிக்கு மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரத்தில் உள்ள ஓட்டுகள் எண்ணும் பணிகள் துவங்கப்படும்.
ஓட்டு எண்ணிக்கை அன்று காலை 5:00 மணிளவில் சுழற்சி முறை ((ரேண்டமைசேஷன்) மூலம் ஓட்டு எண்ணிக்கை மேற்பார்வையாளர், உதவியாளர் மற்றும் நுண் பார்வையாளர்களுக்கு மேஜை ஒதுக்கீடு செய்யப்படும்.
ஓட்டு எண்ணிக்கை மையத்திற்கு மொபைல், ஐ பேட், லேப்டாப் உள்ளிட்ட எந்த மின்னணு சாதனத்தையும் அலுவலர்கள், பணியாளர்கள் எடுத்துவரக் கூடாது. ஒரு சட்டசபை தொகுதிக்கு 14 மேஜைகள் அமைக்கப்பட உள்ளது. ஒரு மேஜைக்கு ஒரு நுண்பார்வையாளர், ஒரு மேற்பார்வையாளர் மற்றும் ஒரு உதவியாளர் பணிகள் மேற்கொள்வார்கள்.
தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட சட்டசபை தொகுதியைத் தவிர வேறு சட்டசபை தொகுதியின் ஓட்டு எண்ணும் அறைக்கு சென்று பார்வையிடக் கூடாது. ஓட்டு எண்ணிக்கை முடியும் வரை அலுவலர்கள் எவரும் அறையினை விட்டு வெளியே செல்லக் கூடாது.
ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு வேட்பாளருக்கு ஒரு முகவர் என்ற விகிதத்தில் ஓட்டு எண்ணிக்கை முகவர்கள் வேட்பாளர்களால் நியமிக்கப்படுவார்கள். அவர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இருக்கையிலிருந்து ஓட்டு எண்ணிக்கையை பார்வையிடலாம்.
ஓட்டு எண்ணிக்கை தொடர்பாக சந்தேகம் ஏற்பட்டால், அம்மையத்தில் உள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மட்டுமே தங்களது கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும்.
ஓட்டு எண்ணும் பணிகள் மேற்கொள்ள உள்ள அலுவலர்கள், பணியாளர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பணிகளை சிறப்புடன், எவ்வித புகாருக்கும் இடமளிக்காத வகையில் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் ஷ்ரவன்குமார் பேசினார்.
கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சங்கர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் லுார்துசாமி, கீதா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் தியாகராஜன், கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், நுண்பார்வையாளர் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.

