ADDED : ஆக 26, 2026 03:00 PM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில், 5 வது மாவட்ட அளவிலான சிலம்ப போட்டி நடந்தது. மாவட்ட சிலம்ப சங்க செயலாளர் ஜெயபால் தலைமை தாங்கினார்.
சங்க தலைவர் சரவணன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக லயன்ஸ் சங்க தலைவர் நேரு, செயலாளர் கண்ணன், பொருளாளர் வினோத் ஆகியோர் பங்கேற்று போட்டியை துவக்கி வைத்தனர்.
இதில்,10, 14, 18 மற்றும் 35 வயதுக்குட்பட்டோர் என 4 பிரிவுகளில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான சிலம்ப போட்டி நடத்தப்பட்டது.
இதில், குத்துவரிசை, கம்பு வீச்சு, அலங்கார வீச்சு, வேல் கம்பு வீச்சு, ஒற்றை வாள்வீச்சு, ஒற்றை சுருள் வாள்வீச்சு, இரட்டை கம்பு, இரட்டை வாள் வீச்சு, இரட்டை சுருள் வாள்வீச்சு, கம்பு சண்டை உட்பட 13 வகையான போட்டிகள் நடந்தன.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட சிலம்ப வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இதில் வெற்றி பெற்றவர்களுக்கு லயன்ஸ் சங்க நிர்வாகிகள் சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கி கவுரவித்தனர். இப்போட்டியில் வெற்றி பெற்றவர்கள் அடுத்த கட்டமாக மாநில அளவில் நடைபெறும் சிலம்ப போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
