/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வீடு தேடி காசநோய் கண்டறியும் பரிசோதனை... தீவிரம்; இந்தாண்டிற்குள் நோயை கட்டுப்படுத்த இலக்கு
/
வீடு தேடி காசநோய் கண்டறியும் பரிசோதனை... தீவிரம்; இந்தாண்டிற்குள் நோயை கட்டுப்படுத்த இலக்கு
வீடு தேடி காசநோய் கண்டறியும் பரிசோதனை... தீவிரம்; இந்தாண்டிற்குள் நோயை கட்டுப்படுத்த இலக்கு
வீடு தேடி காசநோய் கண்டறியும் பரிசோதனை... தீவிரம்; இந்தாண்டிற்குள் நோயை கட்டுப்படுத்த இலக்கு
ADDED : ஜூலை 02, 2025 07:29 AM

தமிழகத்தில் இந்தாண்டிற்குள் காசநோயை கட்டுப்படுத்தும் இலக்குடன் மத்திய, மாநில அரசு உதவியுடன் சுகாதாரத்துறை சார்பில், தீவிர தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக மாவட்டத்தில் மத்திய, மாநில அரசு சார்பில், கடந்தாண்டு டிசம்பரில் தொடங்கி இந்தாண்டு மார்ச் வரை, 100 நாட்களுக்கு தொடர் காசநோய் கண்டறியும் முகாம் நடந்தது.
இந்த திட்டம் சிறப்பாக நடந்ததால், இந்தாண்டில் காசநோய் இல்லாத தமிழகத்தை உருவாக்கவும், தொடர்ந்து வரும், 2026 மார்ச் வரை, வீடு தேடி காசநோய் கண்டறியும் முகாமை தீவிரமாக செயல்படுத்தவும் அரசு அறிவுறுத்தியுள்ளது.
வீடு தேடி சிறப்பு முகாம்
இது குறித்து காசநோய் பிரிவு சுகாதாரத்துறை துணை இயக்குநர் சுதாகர் கூறியதாவது;
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடந்து வரும் சிறப்பு முகாம், அனைத்து கிராமங்களிலும் நேரடியாக மக்களை சந்தித்து, காசநோயின் அறிகுறிகளான 2 வாரங்களுக்கு மேல் இருமல், பசியின்மை, தொடர்ச்சியாக எடை குறைதல், மாலை நேர காய்ச்சல், சளியில் ரத்தம் வருதல் போன்றவற்றை விளக்கி விழிப்புணர்வு செய்யப்படுகிறது.
அதி நவீன நடமாடும் 'எக்ஸ்ரே' வாகனத்தை பயன்படுத்தி பரிசோதனை செய்தல், சளி பரிசோதனைக்கு அதிநவீன பரிசோதனைகள் அனைத்தும், கிராமங்களில் படிப்படியாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
இதன் மூலம் காசநோய் பாதிப்பு தெரிந்தால், உடனடியாக மருந்துவம் பார்த்து, தொடர்ந்து மருந்து அளிக்கப்பட்டு வருகிறது.
பிறகு சத்தான உணவு பொருட்கள் காசநோயாளிகள் உட்கொள்வதற்கு அரசால், மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகின்றது. அதேபோல நன்கொடையாளர்கள், பொதுமக்கள் மூலமாக அவ்வப்போது ஊட்டச்சத்துபொருட்கள் பெற்றும் வழங்கப்படுகிறது.
கடந்த 6 மாதத்தில் நடந்த சிறப்பு முகாமில், (டிசம்பர் முதல் மே வரை) எக்ஸ்ரே 8,642 பேருக்கும், அதிநவீன சளி பரிசோதனை 79,082 பேருக்கும் செய்யப்பட்டது. இதன் மூலம் 1,026 புதிய காசநோயாளிகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு மருந்து அளிக்கப்பட்டு வருகிறது.
மக்கள் ஒத்துழைப்பு தேவை
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கடந்த 2022ம் ஆண்டு 48,724 பேருக்கு சளி பரிசோதனை செய்யப்பட்டு, 2,840 பேருக்கு காசநோய் பாதிப்பு கண்டறியப்பட்டது. கடந்த, 2023ம் ஆண்டில் 1,14,300 பேருக்கு பரிசோதனை செய்து 3056 பேருக்கு கண்டறியப்பட்டது. கடந்தாண்டில் 1,30, 552 பேருக்கு பரிசோதனை செய்து 2,837 பேருக்கு காசநோய் பாதிப்பு கண்டறிந்து, சிகிச்சையளிக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில், கடந்த 2022ம் ஆண்டு 20 சதவீதத்திற்கும் கீழ், காசநோயை குறைத்ததற்காக வெண்கல பதக்கம் வழங்கப்பட்டது.அதனால் முகாம் தொடர்ந்து செயல்பட்டு வருவதை மக்கள் பயன்படுத்தி கொண்டு, பரிசோதனை செய்துகொண்டு, நோயை ஒழிக்க ஒத்துழைக்க வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு, மாவட்ட காசநோய் மையத்தை விழுப்புரம்- 9566971412, கள்ளக்குறிச்சி - 9843313993, ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.