/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
எலவனாசூர்கோட்டை மேம்பாலம் திறப்பு: வழிகாட்டி பலகை இன்றி வாகன ஓட்டிகள் குழப்பம்
/
எலவனாசூர்கோட்டை மேம்பாலம் திறப்பு: வழிகாட்டி பலகை இன்றி வாகன ஓட்டிகள் குழப்பம்
எலவனாசூர்கோட்டை மேம்பாலம் திறப்பு: வழிகாட்டி பலகை இன்றி வாகன ஓட்டிகள் குழப்பம்
எலவனாசூர்கோட்டை மேம்பாலம் திறப்பு: வழிகாட்டி பலகை இன்றி வாகன ஓட்டிகள் குழப்பம்
ADDED : மார் 25, 2025 07:46 AM

தியாகதுருகம்; எலவனாசூர்கோட்டை புறவழிச்சாலை மேம்பாலம் திறக்கப்பட்டுள்ள நிலையில், வழிகாட்டி பலகை இல்லாததால் வாகன ஓட்டிகளுக்கு குழப்பம் காரணமாக விபத்து அபாயம் எழுந்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை - சேலம் இடையே புறவழிச்சாலை சந்திக்கும் இடங்கள் மற்றும் முக்கிய சாலை சந்திப்புகளில் விபத்து அதிகரித்தது. ஆபத்தான இடங்களைக் கண்டறிந்து 13 இடங்களில் மேம்பாலம் அமைக்கும் பணி 252.5 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் நடந்து வருகிறது.
இதில், எலவனாசூர்கோட்டையில் மேம்பாலம் பணி பூர்த்தியடைந்து கடந்த சில தினங்களாக சோதனை ஓட்டத்திற்காக வாகனங்கள் மேம்பாலம் வழியே செல்ல திறந்து விடப்பட்டுள்ளது.
மேம்பாலத்தில் வாகனங்கள் செல்ல அனுமதிப்பதற்கு முன், முறையான வழிகாட்டி பலகை அமைத்திருக்க வேண்டும்.
மேம்பாலத்தையொட்டி, உளுந்துார்பேட்டையில் இருந்து செல்லும் வாகனங்கள் எலவனாசூர்கோட்டை ஊருக்கு செல்வதற்கு வழிகாட்டி பலகை இல்லை.
இதனால் வழக்கமாக வரும் வாகன ஓட்டிகளைத் தவிர புதிதாக வருவோர் எலவனாசூர்கோட்டைக்கு செல்வதற்கான வழி தெரியாமல் தடுமாறுகின்றனர்.
நெடுஞ்சாலையில் வேகமாக செல்லும் வாகனங்கள் மேம்பாலத்தின் மீது ஏறும்போது சுதாரித்துக் கொண்டு சர்வீஸ் சாலைக்குச் செல்ல திடீரென பிரேக் போட்டு இடது புறமாக திரும்புகின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
புதிய மேம்பாலத்தின் மீது சென்றால் நேராக கள்ளக்குறிச்சி, சேலம் செல்ல வேண்டும். மேம்பாலத்தை ஒட்டிய சர்வீஸ் சாலையில் சென்று மேம்பாலத்தின் கீழே உள்ள வழியாகதான் எலவனாசூர்கோட்டைக்கு செல்ல முடியும். இதுகுறித்து முறையான வழிகாட்டி பலகை எந்த ஒரு இடத்திலும் அமைக்கப்படவில்லை.
அதனால் வாகன ஓட்டிகள் குழப்பம் அடைந்து, சேலம் சாலையில் நீண்ட துாரம் சென்று, பிறகு திரும்பி வர வேண்டிய நிலை உள்ளது. குறிப்பாக, இரவு நேரத்தில் இப்பகுதியில் போதிய வெளிச்சம் இல்லாததால் எந்த வழியாக செல்வதென்றே புரியாமல் பலர் தடுமாறுகின்றனர்.
மேம்பாலம் புதிதாக அமைக்கப்பட்டதால் பழைய வழித்தடத்தையே காண்பிப்பதால் கூகுள் வழிகாட்டியை பயன்படுத்தியும் செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே, உடனடியாக வழிகாட்டி பலகை அமைத்து வாகன ஓட்டிகள் குழப்பமின்றி செல்வதற்கு வழிவகை செய்ய வேண்டும்.