/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
எல்ராம்பட்டு சமூக நீதி விடுதி திடீர் மூடல்
/
எல்ராம்பட்டு சமூக நீதி விடுதி திடீர் மூடல்
ADDED : அக் 17, 2025 11:28 PM

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அடுத்த எல்ராம்பட்டு கிராமத்தில் இயங்கி வந்த சமூக நீதி விடுதி திடீரென மூடப்பட்டதால் மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
திருக்கோவிலுார் அருகே உள்ளது எல்ராம்பட்டு கிராமம். கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலுார் தொகுதியை உள்ளடக்கியுள்ளது.
இங்குள்ள அரசு நிதி உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் 280க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இதற்காக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், சமூக நீதி விடுதி செயல்பட்டு வருகிறது. இதில், 14 மாணவர்கள் தங்கி பயின்று வந்தனர். காலாண்டு தேர்வு முடிந்து கடந்த 6ம் தேதி பள்ளி திறக்கப்பட்டது.
அப்போது, சமூக நீதி விடுதி மூடப்பட்டு இருந்தது.
வடமலையனுார், பழங்கூர், பெரியனுார் என சுற்று வட்டார கிராமங்களில் இருந்து வந்த மாணவர்கள் விடுதி மூடப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். செய்வதறியாத பெற்றோர் தங்கள் பிள்ளைகளை திரும்ப வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.
முன்னறிவிப்பு ஏதுமின்றி விடுதி மூடப்பட்டது குறித்து பெற்றோர்கள் கல்வித்துறை அதிகாரிகளை நேரில் சந்தித்து மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கை இல்லை.
விடுதியில் தங்கிப் பயின்ற 14 மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகி உள்ளது.
கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் ஏணியாக இருந்த விடுதி திடீரென மூடப்பட்டது சுற்று வட்டார அடித்தட்டு மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இவ்விஷயத்தில் அரசு லாப நஷ்ட கணக்கு பார்க்காமல் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு விடுதியை உடனடியாக திறக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.