/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
காணாமல் போகும் ஏரிகளால் விவசாயிகள். . . ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை
/
காணாமல் போகும் ஏரிகளால் விவசாயிகள். . . ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை
காணாமல் போகும் ஏரிகளால் விவசாயிகள். . . ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை
காணாமல் போகும் ஏரிகளால் விவசாயிகள். . . ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை
ADDED : மார் 21, 2025 07:09 AM

மூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி ஏரிகளில், ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருவதால் விவசாயிகள் கடும் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர். இதனால் கடும் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளதால் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள கோரிக்கை எழுந்துள்ளது.
மூங்கில்துறைப்பட்டு மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களில், 57 ஏரிகள் உள்ளன. இதில், 48 ஏரிகளில் சாத்தனுார் அணையில் இருந்து திறந்து விடப்படும் உபரி நீர், கால்வாய் வழியாக நேரடியாக சென்றடைகிறது. மீதி உள்ள, 8 ஏரிகள் மழை பெய்தால் நிரம்புகின்றன. இந்நிலையில் பெரும்பாலான ஏரிகளை அந்தந்த பகுதியில் உள்ள சிலர் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருகின்றனர்.
அதேபோல, இன்னும் சிலர் வீடு கட்டி வசித்து வருகின்றனர். இதனால் அந்த ஏரிகளின் பரப்பளவு, நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.
பொதுமக்கள் ஏரி நீரை கொண்டு விவசாயம் மற்றும் குடிநீருக்கான ஆதாயத்தை தேடி வருவதால், ஆக்கிரமிப்பு அதிகரிக்கும் போது, விவசாயிகளுக்கு தண்ணீர் மற்றும் மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
ஆக்கிரமிப்பு
தற்போது சவேரியார்பாளையம் தேவபாறை ஏரியின் பரப்பளவு அதிக அளவில் குறைந்து குளம் போன்று காட்சியளிக்கிறது. அப்பகுதியில் உள்ளவர்கள் போட்டி போட்டு ஆக்கிரமிப்பில் ஈடுபட்டதே, இதற்கு மிக முக்கிய காரணம். இந்த ஏரியில் தனி நபர் ஒருவர், 5 ஏக்கர் அளவிற்கு ஆக்கிரமிப்பு செய்துள்ளார். அவரைப்பார்த்து மற்றவர்களும், ஆக்கிரமிப்பை அதிகரித்து கொண்டே வருகின்றனர். இந்த ஏரியில், 20 ஏக்கர் பரப்பளவு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
இதேபோல ஒவ்வொரு ஏரியிலும், ஆக்கிரமிப்புகள் அதிகரித்து கொண்டே வருகின்றன. அதனால் மாவட்ட நிர்வாகம், இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
நடவடிக்கை
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'மாவட்ட நிர்வாகம் ஆக்கிரமிப்புகளை பலமுறை அகற்றுவதாக கூறியும், இது நாள் வரை ஒரு ஏரியில் கூட ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை என்பது வேதனை அளிக்கிறது.
வெயில் காலங்களில் ஏரிகளில் நீரின்றி, விவசாயம் செய்ய முடியவில்லை. அதேபோல, கடுமையான குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டு வருகிறது. அதனால், மூங்கில்துறைப்பட்டு சுற்றி உள்ள அனைத்து ஏரிகளையும் ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றி, அதனை மீட்டெடுக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என்றனர்.