/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மார்க்கெட் கமிட்டிகளில் கொள்முதல் துவங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சி
/
மார்க்கெட் கமிட்டிகளில் கொள்முதல் துவங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சி
மார்க்கெட் கமிட்டிகளில் கொள்முதல் துவங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சி
மார்க்கெட் கமிட்டிகளில் கொள்முதல் துவங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : ஆக 04, 2025 11:27 PM
கள்ளக்குறிச்சி:வியாபாரிகளின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதால், மார்க்கெட் கமிட்டியில் நேற்று விற்பனை துவங்கியது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, சின்னசேலம், சங்கராபுரம், உளுந்துார்பேட்டை, தியாகதுருகம், மணலுார்பேட்டை ஆகிய 6 இடங்களில் மார்க்கெட் கமிட்டி இயங்கி வருகிறது.
சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மணிலா, நெல், எள், உளுந்து, மக்காச்சோளம் உட்பட பல்வேறு வகையான விளைபொருட்களை விற்பனைக்காக மார்க்கெட் கமிட்டிக்கு கொண்டு வருவர்.
அங்கு, விளைபொருட்களின் தரத்தை பொறுத்து வியாபாரிகள் விலை நிர்ணயம் செய்வர். அதைத்தொடர்ந்து, விவசாயிகளின் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படும்.
கடந்த 1ம் தேதி முதல் மார்க்கெட் கமிட்டியில் 'இ-நாம்' புதிய நடைமுறை அமல்படுத்தப்படுவதாக வேளாண்மை விற்பனை வாரிய ஆணையர் உத்தரவிட்டார். இத்திட்டத்தில் பல்வேறு நடைமுறை சிக்கல் இருப்பதாகவும், பழைய நடைமுறையை அமல்படுத்த வலியுறுத்தி 7 மாவட்ட வியாபாரிகள் கடந்த 30ம் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டம் துவக்கினர். இதனால், விவசாயிகள் கொண்டு வந்த விளைபொருட்கள் மார்க்கெட் கமிட்டிகளில் தேங்கியது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த 30, 31 மற்றும் 1ம் தேதிகளில் விவசாயிகள் கொண்டு வந்த 3,048 மூட்டை விளைபொருட்கள் விற்பனையாகாமல் குடோனில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. இந்நிலையில், பழைய முறையிலேயே பணம் பட்டுவாடா செய்யப்படும் என அமைச்சர் பன்னீர்செல்வம் நேற்று முன்தினம் உறுதியளித்தார்.
இதையடுத்து, போராட்டத்தை வாபஸ் பெற்ற வியாபாரிகள் மார்க்கெட் கமிட்டியில் இருந்த பொருட்களை நேற்று கொள்முதல் செய்தனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.