/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மோசமான சர்க்கரை ஆலை சாலையால் விவசாயிகள்... குமுறல்; மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
/
மோசமான சர்க்கரை ஆலை சாலையால் விவசாயிகள்... குமுறல்; மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
மோசமான சர்க்கரை ஆலை சாலையால் விவசாயிகள்... குமுறல்; மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
மோசமான சர்க்கரை ஆலை சாலையால் விவசாயிகள்... குமுறல்; மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
ADDED : செப் 04, 2025 12:46 AM

கச்சிராயபாளையம்: கச்சிராயபாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்பு ஏற்றி செல்லும் சாலை படுமோசமான நிலையில் உள்ளதால் வாகன ஓட்டிகள் மற்றும் விவசாயிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். தமிழகத்தில் கரும்பு சாகுபடி செய்வதில் கள்ளக்குறிச்சி மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் 1.27 ஹெக்டேர் பரப்பில் கரும்பு பயிரிட்டாலும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மட்டும் 21,394 ஹெக்டேர் பரப்பில் கரும்பு சாகுபடி நடக்கிறது. இங்கு, 2 கூட்டுறவ மற்றும் 1 தனியார் சர்க்கரை ஆலை உள்ளது.
கடந்த காலத்தில் கச்சிராயபாளையம் மற்றும் சுற்றுபுற வட்டார பகுதியில் அறுவடை செய்யும் கரும்புகள் மூங்கில்துறைப்பட்டு மற்றும் சேத்தியாதோப்பு ஆலைக்கு அனுப்பட்டது.
கடந்த 1997ம் ஆண்டு கச்சிராயபாளையத்தில் நாள் ஒன்றுக்கு 2500 டன் அரவை திறன் கொண்ட கோமுகி கூட்டுறவு சர்க்கரை ஆலை புதிதாக துவங்கப்பட்டது. அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை முதன்மை அரவை பருவமும், ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதம் வரை சிறப்பு அரவை பருவம் நடக்கிறது.
கள்ளக்குறிச்சி வடக்கு, தெற்கு, மூரார்பாளையம், தியாகதுருகம் உள்ளிட்ட பகுதிகளில் அறுவடை செய்யப்படும் கரும்புகள் டிராக்டர்கள் மூலம் கள்ளக்குறிச்சி நகர் பகுதி வழியாக கச்சிராயபாளையம் ஆலையை சென்றது.
இதனால் நகர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்ததுடன் அடிக்கடி விபத்துகள் நடந்தது.
இதனை தடுக்க சங்கராபுரம், மூரார்பாளையம், தியாகதுருகம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வரும் கரும்பு லோடு வாகனங்கள் ரோடுமாமாந்துார், சோமண்டார்குடி, சடையம்பட்டு, தோப்பூர் வழியாக கோமுகி ஆற்றை கடந்து கச்சிராயபாளையம் ஆலைக்கு செல்லும் வகையில் சர்க்கரை ஆலை சாலை அமைக்கப்பட்டது.
இச்சாலை பல ஆண்டுகளாக புதுப்பிக்கபடாமல் கிடக்கிறது. குறிப்பாக சடையம்பட்டு முதல் தோப்பூர் வரையிலான 6 கி.மீ., சாலை குண்டும் குழியுமாக லோடு வாகனங்கள் செல்ல முடியாத படுமோசமான நிலையில் உள்ளது. இச்சாலை வழியாக கரும்பு ஏற்றி செல்லும் வாகனங்கள் அடிக்கடி பழுதாகி நிற்பதுடன், டிராக்டர்கள் கவிழ்வதும், கரும்புகள் சரிந்து கீழே கொட்டுவதும் தொடர் கதையாக நடந்து வருகிறது.
லோடு வாகனங்களில் இருந்து கீழே சரிந்து விழும் கரும்புகளை வேறு வாகனங்களில் ஏற்ற வேண்டிய நிலை உள்ளது. இதனால் விவசாயிகள் கூடுதல் செலவு ஏற்படுகிறது. தற்போது கச்சிராயபாளையம் ஆலை சிறப்பு அரவை பருவம் துவங்கி நடந்து வருகிறது.
ஆலைக்கு கரும்பு ஏற்றி செல்லும் சாலை பராமறிப்பின்றி குண்டும் குழியுமாக கிடப்பதால், கரும்பு லோடு ஏற்றி செல்லும் வாகனங்கள் சடையம்பட்டு கிராமம் வழியாக குதிரைச்சந்தல் பஸ் நிறுத்தம் சென்று, அங்கிருந்து கச்சிராயபாளையம் சர்க்கரை ஆலைக்கு செல்கின்றது.
இதனால் கச்சிராயபாளையம் - கள்ளக்குறிச்சி சாலையில் மீண்டும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், விபத்துக்களும் அதிகரித்து வருகின்றது. விவசாயிகள் நலன் கருதி, சடையம்பட்டு, மட்டிகைக்குறிச்சி, தோப்பூர் வரையிலான சர்க்கரை ஆலை சாலையை போர்கால அடிப்படையில் புனரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.