/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மரவள்ளிக்கிழங்கு பயிரிடும் மலை வாழ் மக்கள் பாதிப்பு! கள்ளக்குறிச்சியில் 'சேகோ' ஆலை அமைக்க கோரிக்கை
/
மரவள்ளிக்கிழங்கு பயிரிடும் மலை வாழ் மக்கள் பாதிப்பு! கள்ளக்குறிச்சியில் 'சேகோ' ஆலை அமைக்க கோரிக்கை
மரவள்ளிக்கிழங்கு பயிரிடும் மலை வாழ் மக்கள் பாதிப்பு! கள்ளக்குறிச்சியில் 'சேகோ' ஆலை அமைக்க கோரிக்கை
மரவள்ளிக்கிழங்கு பயிரிடும் மலை வாழ் மக்கள் பாதிப்பு! கள்ளக்குறிச்சியில் 'சேகோ' ஆலை அமைக்க கோரிக்கை
ADDED : ஏப் 24, 2025 06:53 AM

கல்வராயன்மலை முழுவதும் மரவள்ளி மட்டுமே பயிரிடப்படுகிறது. இதனை நம்பியே மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் இருக்கிறது. மாவட்டத்தில் 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிற்கு மேல் மரவள்ளி பயிரிடப்பட்டு வருகிறது.
நீர்வளம் குறைந்த பகுதியில் கூட விவசாயிகள் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்வதில் அப்பகுதி மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். நிலத்தடி நீர் மட்டம் குறையும் தருணங்களில் சொட்டு நீர் பாசன முறையிலும் மரவள்ளி பயிரிடப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு, 10 முதல் 15 டன் வரை கிழங்கு கிடைக்கிறது.
மரவள்ளிக் கிழங்கிலிருந்து ஸ்டார்ச், சேமியா, ஜவ்வரிசி, மைதா, கால்நடை தீவனங்கள் தயாரிக்கப்படுகின்றன. இதனை உற்பத்தி செய்யும் பெரும்பாலான 'சேகோ' ஆலைகள், சேலம் மாவட்டம், தலைவாசல், ஆத்துார் பகுதியில் உள்ளன.
விலை நிர்ணயத்தில் சிக்கல்
அறுவடைக்கு பின் மரவள்ளிக் கிழங்குகள் பெரும்பாலும் புரோக்கர்கள் மூலமே, அந்த ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
இதனால் உரிய ஆதார விலையை ஆலை நிர்வாகம் மட்டுமே தீர்மானிக்கிறது.
இதனால் கொள்முதல் விலையானது, சூழ்நிலையை பொருத்து பெருமளவில் வீழ்ச்சியை சந்திக்கும் அபாயம் உள்ளது. சில நேரங்களில் கடும் நஷ்டத்தையும் சந்திக்கிறது.
போக்குவரத்து செலவு அதிகரிப்பதோடு, புரோக்கர்களின் தலையீடும் கொள்முதல் விலையின் சரிவுக்கு காரணமாகவும் இருக்கிறது.
விவசாயிகள் பாதிப்பு
இதற்கிடையே பரமாரிப்பு செலவினம், போக்குவரத்து செலவு, ஆட்கள் கூலி, திடீரென ஏற்படும் விலை வீழ்ச்சி போன்ற பல்வேறு காரணங்களால் பெரும் பாதிப்புக்களை விவசாயிகள் சந்தித்து வருகின்றனர். இதனால், மரவள்ளி சாகுபடி மெல்ல மெல்ல குறைவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன.
இதற்குத் தீர்வாக மாவட்டத்தில், மரவள்ளிக்கிழங்கில் இருந்து உணவுப்பொருட்களை தயார் செய்யும் 'சேகோ' ஆலையை அமைக்க வேண்டும் என, பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் ஒரு டன் மரவள்ளிக்கிழங்கு ரூ.10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரை கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது ஒரு டன்னுக்கு 6 ஆயிரம் ரூபாய் மட்டுமே கிடைக்கிறது.
முன்பு, சாகுபடி செய்ய குறைந்த பட்ச செலவு தான் ஆனது. ஆனால் காலநிலை, சூழ்நிலை மாற்றம் காரணமாக கடந்த, 3 ஆண்டுகளாக பல்வேறு வகை பூச்சு தாக்குதலை கட்டுப்படுத்தி மரவள்ளி பயிரிடுவது பெரும் சவாலாக உள்ளது.
ஏக்கருக்கு குறைந்தபட்சம், 40 ஆயிரம் மேல் செலவாகிறது.பருவ மழை பாதிப்பின் போது மட்டுமே மரவள்ளி கிழங்கு விலை குறையும். ஆனால் தற்போது ஆலை நிர்வாகத்தினரே திட்டமிட்டு விலையை குறைக்கின்றனர். மாவட்டத்தில் 'சேகோ' ஆலை அமையும் பட்சத்தில் மரவள்ளி சாகுபடி பரப்பளவு மேலும் அதிகரிக்கும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.