/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சர்க்கரை ஆலையில் இருந்து வெளியேறும் கரித் துகள்களால்... பாதிப்பு; புகைபோக்கியில் பில்டர் பொருத்தி தடுக்க கோரிக்கை
/
சர்க்கரை ஆலையில் இருந்து வெளியேறும் கரித் துகள்களால்... பாதிப்பு; புகைபோக்கியில் பில்டர் பொருத்தி தடுக்க கோரிக்கை
சர்க்கரை ஆலையில் இருந்து வெளியேறும் கரித் துகள்களால்... பாதிப்பு; புகைபோக்கியில் பில்டர் பொருத்தி தடுக்க கோரிக்கை
சர்க்கரை ஆலையில் இருந்து வெளியேறும் கரித் துகள்களால்... பாதிப்பு; புகைபோக்கியில் பில்டர் பொருத்தி தடுக்க கோரிக்கை
ADDED : அக் 03, 2025 11:23 PM

மூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இருந்து வெளியேறும் கரித்துகள்களால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். மூங்கில்துறைப்பட்டில் கடந்த 1968ம் ஆண்டு முதல் கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இந்த சர்க்கரை ஆலைக்கு 40க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து விவசாயிகள் கரும்புகள் அறுவடை செய்து ஆலைக்கு அனுப்புகின்றனர். தமிழக அளவில் அதிக சர்க்கரை உற்பத்தி செய்யும் ஆலையாக கூட்டுறவு சர்க்கரை ஆலை திகழ்கிறது.
கரும்பு சாறில் இருந்து சர்க்கரை பிரித்தெடுக்கும் பணிக்கு, பாய்லர் பயன்படுகிறது. பாய்லரை வெப்படுத்த மரக்கட்டைகள் மற்றும் கரும்பு பிழிந்த பிறகு வெளியேறும் கரும்பு சக்கை கழிவுகளை எரிக்கின்றனர்.
இதன் மூலம் வெளியாகும் கரும்புகை கரித்துகள்களும் புகைபோக்கி மூலம் வெளியேறுகிறது. கரித்துகள்களை தடுக்க புகை போக்கியில் பில்டர் பொருத்தப்பட்டு இருக்கும். ஆனால், சர்க்கரை ஆலை புகை போக்கியில் பில்டர் அமைப்பு இல்லை.
புகைபோக்கி வழியாக வெளியேறும் கரித்துகள் காற்றில் கலந்து அருகில் உள்ள வீடுகள், விவசாய நிலங்கள், குடிநீர் கிணறுகள், குளங்கள், ஏரிகளில் படிந்து விடுகிறது. இதனால் மூங்கில்துறைப்பட்டில் மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.
காற்றில் கரித்துகள்கள் கலந்து பறப்பதால், பைக்கில் செல்வோர் கண்ணில் பட்டு எரிச்சல், நீர் வடிதல், சுவாச கோளாறு என பல்வேறு பாதிப்பு ஏற்படுகிறது. குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்கள் சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்படுகின்றனர்.
கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பொருவளூர், பொரசப்பட்டு, ஈருடையாம்பட்டு, சுத்தமலை, ஆற்கவாடி, ஆதனுார் மோட்டூர், மங்கலம், சவேரியார் பாளையம், இளையாங்கன்னி, தொண்டமானுார், வாழவச்சனுார், சதா குப்பம், பெருந்துறைப்பட்டு, அகரம் பள்ளிப்பட்டு, மேலந்தல் உள்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் மக்கள் மற்றும் விவசாயிகள் கரித்துகள்களால் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.
இதனை கண்டித்து மூங்கில்துறைப்பட்டில் கடந்த பல ஆண்டுகளாக பல கட்ட போராட்டங்கள் நடந்துள்ளது. இதுவரை கரித்துகள் பறப்பது தடுக்கப்படவில்லை.
போராட்டங்கள் நடக்கும்போது, பேச்சுவார்த்தை நடத்தும் எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகள் மீண்டும் இப்பிரச்னை வராது என உறுதி அளிக்கின்றனர். ஆனால், அடுத்த சில நாட்களிலே மீண்டும் காற்றில் கரித்துகள்கள் பறக்கிறது.
கிராம மக்கள் கூறுகையில்; இரு மாவட்ட கிராமங்களிலும் 20 ஆண்டுகளுக்கு மேல் கரித்துகள் காற்றில் பறக்கும் பாதிப்பு உள்ளது. எந்த ஆட்சி வந்தாலும் இதற்கு தீர்வே கிடைக்கவில்லை. சரி செய்கிறோம் என வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த பின்பு, இப்பிரச்னையை யாரும் கண்டுகொள்வது கிடையாது.
மக்களின் ஒவ்வொரு போராட்டத்தின்போதும், மாசு கட்டுப்பாட்டு துறையிலிருந்து சர்க்கரை ஆலையில் ஆய்வு செய்கின்றனர். ஆய்வுக்கு பிறகு எந்தவித நடவடிக்கையும் எடுப்பது கிடையாது. வழக்கம்போல் காற்றில் கரித்துகள் பறப்பது தொடர்கிறது. 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் நலன் கருதி, சர்க்கரை ஆலையில் இருந்து வெளியேறும் கரித்துகள்களை கட்டுப்படுத்த அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.