/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
விவசாயம் நிறைந்த கள்ளக்குறிச்சி மாவட்டம்: தண்ணீர் சேமிப்பில் அதிகாரிகள் அலட்சியம்
/
விவசாயம் நிறைந்த கள்ளக்குறிச்சி மாவட்டம்: தண்ணீர் சேமிப்பில் அதிகாரிகள் அலட்சியம்
விவசாயம் நிறைந்த கள்ளக்குறிச்சி மாவட்டம்: தண்ணீர் சேமிப்பில் அதிகாரிகள் அலட்சியம்
விவசாயம் நிறைந்த கள்ளக்குறிச்சி மாவட்டம்: தண்ணீர் சேமிப்பில் அதிகாரிகள் அலட்சியம்
ADDED : நவ 18, 2025 07:27 AM

வி வசாயம் நிறைந்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நீர் பிடிப்பு பகுதியில் தண்ணீரை சேமிப்பதில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுவதாக விவசாயிகள் புலம்பி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் விவசாயம் நிறைந்த பகுதியாக உள்ளது. கரும்பு, நெல், மரவள்ளி, மக்காசோளம், மஞ்சள் உள்ளிட்ட பயிர்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் அணைகள் மற்றும் ஏரிகள் விவசாயத்திற்கு முக்கிய நீர் ஆதரமாக இருக்கிறது.
பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் கோமுகி, மணிமுக்தா அணைகள், 3 ஆறுகள், 335 ஏரிகள் உள்ளன. அதேபோல் பஞ்சாயத்திற்குட்பட்ட 380 ஏரிகள் உள்ளன. பருவ மழைக் காலங்களில் அணைகள், ஏரிகள் போன்ற நீர் பிடிப்புகள் முழுமையாக நிரம்பினால் மூன்று போகம் பயிர் சாகுபடி வழிவகுக்கும். பருவ மழை பொய்த்து போனால், விவசாயிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.
மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகள் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ளது. ஆறுகளின் தடுப்பணையில் இருந்து ஏரிகளுக்கு செல்லும் நீர் வரத்து கால்வாய்கள் ஆங்காங்கே துார்ந்து போயும், சில இடங்களில் கால்வாய் இன்றியும் உள்ளது.
இதனால், மழைக் காலங்களில் நீர் வரத்து ஏற்பட வாய்ப்புகள் இல்லாத ஏரிகளில், சுற்று வட்டாரத்தில் பெய்யும் மழை நீர் மட்டுமே தேங்கி நிற்கிறது. பருவ மழையின் போது தேவையான அளவிற்கு தண்ணீரை சேமித்தால் மட்டுமே கோடை காலங்களில் பயன்படுத்திட முடியும். இல்லையெனில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும்.
விவசாயிகள், ஒவ்வொரு குறைகேட்புக் கூட்டத்திலும், நீர் வரத்து மற்றும் பாசன கால்வாய்கள் சீரமைப்புக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கின்றனர். கூட்டத்தில், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் முன்பு சம்மந்தப்பட்ட அலுவலர்கள் உத்தரவாதம் அளிக்கின்றனர். அதன்பின் கண்டு கொள்வது கிடையாது.
ஒவ்வொரு மாதமும் விவசாயிகள் பலர் ஏரி ஆக்கிரமிப்பு, கால்வாய் சீரமைப்பு தொடர்பாக புகார் அளித்து பகிரங்கமாக குற்றம் சாட்டுவதை காணமுடிகிறது. நீர் பிடிப்பு பகுதிகளில் தண்ணீரை சேமிப்பதில் அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுவதாகவும் புலம்பி வருகின்றனர். எனவே நீர் பிடிப்பு பகுதியில் ஆக்கிரமிப்பு, கால்வாய் சீரமைப்பு பணியில் தனி கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

