/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கனியாமூர் பள்ளி கலவர வழக்கு: 89 பேர் ஆஜர்
/
கனியாமூர் பள்ளி கலவர வழக்கு: 89 பேர் ஆஜர்
ADDED : மே 08, 2025 01:03 AM
கள்ளக்குறிச்சி:கனியாமூர் பள்ளி கலவரம் தொடர்பான வழக்கு விசாரணையில், 89 பேர் கோர்ட்டில் ஆஜரான நிலையில் வழக்கு விசாரணை இன்றைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், விடுதியில் தங்கி பிளஸ் 2 பயின்ற மாணவி ஸ்ரீமதி கடந்த 2022ம் ஆண்டு ஜூலை மாதம் 13ம் தேதி மர்மமாக இறந்தார். மாணவி இறப்புக்கு நியாயம் கேட்டு ஜூலை, 17ம் தேதி நடந்த போராட்டம், பெரும் கலவரமாக மாறியது. கலவர வழக்கை சிறப்பு புலனாய்வு குழு டி.எஸ்.பி., அம்மாதுரை மேற்பார்வையிலான போலீசார் விசாரித்தனர்.
அதில், பள்ளி வளாகத்திற்குள் இருந்த பொருட்களை சூறையாடி திருடியது, போலீஸ் வாகனத்திற்கு தீ வைத்தது, பசுமாடுகளை துன்புறுத்தியது, சின்னசேலத்தில் காவல் துறை உயர் அதிகாரிகள் உட்பட போலீசாரை கல்வீசி தாக்கியது என மொத்தம் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கலவரம் தொடர்பாக, 916 பேர் மீது வழக்கு பதிந்து, 500க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
இதில் பள்ளி வளாகத்திற்கு முன்பு கலவரத்தில் ஈடுபட்டு, போலீஸ் வாகனங்களுக்கு தீ வைத்தது தொடர்பாக, 121 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதில், ஒருவர் இறந்து விட்டார். இந்த வழக்கு விசாரணை கள்ளக்குறிச்சி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நேற்று நடக்க இருந்தது. மொத்தமாக, 89 பேர் நேற்று ஆஜராகினர்.
இந்நிலையில் சென்னை ஐகோர்ட் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் மறைவையொட்டி கள்ளக்குறிச்சி கோர்ட்டில் நேற்று நடக்க இருந்த அனைத்து வழக்குகளும் இன்றைக்கு ஒத்தி வைக்கப்பட்டன.
இதனால், இந்த வழக்கில் தொடர்புடைய, 120 பேரையும் இன்று ஆஜராக போலீசார் அறிவுறுத்தினர்.