தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ இணைப்பு

இணைப்பு

இணைப்பு


ADDED : செப் 25, 2026 05:31 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 25, 2026 05:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தென்பெண்ணையாற்றை கெடிலம் ஆற்றுடன்... குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் எல் நினோ பாதிப்பால் சேதமடைந்த பயிர்களை கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். கள்ளக்குறிச்சியில் கலெக்டர் பத்மஜா தலைமையில் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் நடந்தது. திருக்கோவிலுார் சப் கலெக்டர் கார்த்திக் ராஜா, ஆர்.டி.ஓ., முருகன், வேளாண்மை இணை இயக்குநர் பேபிகலா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஜோதிபாசு, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில், விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் கோரிக்கை மற்றும் குறைகள் குறித்து பேசியதாவது:

வங்கிகளில் அடகு வைக்கப்பட்டுள்ள தங்க நகையை ‘ரினிவல்’ செய்ய முழு தொகையையும் செலுத்த வேண்டும் என அலுவலர்கள் கூறுவதால் விவசாயிகள் சிரமமடைகின்றனர். எனவே, வட்டி தொகை மட்டும் பெற்று ‘ரினிவல்’ செய்ய வேண்டும்.

பெரும்பாலான பகுதியில் குடிநீரில் அதிகளவு உப்பு இருப்பதால் பலருக்கு கிட்னி பாதிப்பு ஏற்படுகிறது, உடைந்த நிலையில் உள்ள அரும்பராம்பட்டு ஏரி மதகினை சீரமைக்க வேண்டும், கொசப்பாடி ஏரியில் இரவு, பகலாக மண் கொள்ளை நடக்கிறது. சங்கராபுரம் – பூட்டை சாலையில் 3 டாஸ்மாக் கடைகள் இருப்பதால் மாணவிகள், பொதுமக்கள் சிரமமடைகின்றனர்.

விளைநிலங்களில் வளர்க்கப்படும் செம்மரங்களுக்கு பாதுகாப்பு இல்லை, எனவே செம்மரங்களுக்கு காப்பீடு வசதியோ அல்லது நுாறு சதவீத மானியத்தில் மின்வேலி அமைக்கவோ அனுமதிக்க வேண்டும்.

மீன் வளர்ப்புக்காக பாதுார் ஏரியை குத்தகைக்கு எடுத்தவர் தண்ணீரை திறந்து விடுவதால் விவசாயிகள் பயிர் செய்ய முடியாமல் சிரமமடைகின்றனர், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் ஆஞ்சியோ சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். வேளாண் அலுவலகங்களில் காலாவதியாகும் நிலையில் உள்ள மருந்துகளை கட்டாயப்படுத்தி விற்பனை செய்கின்றனர். தென்பெண்ணை ஆற்றை கெடிலம் ஆற்றுடன் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் மரவள்ளி தொழிற்சாலை அமைக்க வேண்டும்.

கள்ளக்குறிச்சியை வறட்சி மாவட்டமாக அறிவிப்பதுடன், எல்நினோ பாதிப்பால் சேதமடைந்த பயிர்களை அதிகாரிகள் கணக்கெடுக்க வேண்டும், கால்நடை துறை சார்பில் தாதுஉப்பு வழங்க வேண்டும்.

கள்ளக்குறிச்சியை மாவட்டத்தில் இல்லாத துறைகளை விரைவில் கொண்டு வர வேண்டும். கலையநல்லுார் தரணி சர்க்கரை ஆலையில் இருந்து வர வேண்டிய நிலுவைத் தொகையைப் பெற்றுத்தர வேண்டும். பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். உளுந்துார்பேட்டை தாலுகா அலுவலகத்தில் கழிவறை, காத்திருப்போர் அறை மற்றும் சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் பேசினர்.

குலுக்கல் முறையில் பேச அனுமதி ஒவ்வொரு மாதமும் நடைபெறும் குறைகேட்புக் கூட்டத்தில் குறிப்பிட்ட சிலர் மட்டுமே பேசுவதாகவும், இதனால் பலருக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை எனவும் சிலர் கலெக்டரிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, குலுக்கல் முறை நேற்று கொண்டுவரப்பட்டது. விவசாயிகளின் பெயர்கள் எழுதிய சீட்டுகளை கண்ணாடி குடுவையில் போட்டு குலுக்கி ஒவ்வொரு சீட்டாக எடுத்தனர். சீட்டில் பெயர் உள்ள விவசாயிக்கு பேச அனுமதி அளிக்கப்பட்டது. விவசாய சங்க பிரதிநிதிகள் பேச கடைசியில் நேரம் ஒதுக்கப்பட்டது.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us