/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
படைப்புழு தாக்குதலால் மக்காச்சோளம் பாதிப்பு
/
படைப்புழு தாக்குதலால் மக்காச்சோளம் பாதிப்பு
ADDED : டிச 16, 2024 05:03 AM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் படைப்புழு தாக்குதலால் மக்காசோளம் பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. தடுப்பு நடவடிக்கைக்கு வேளாண் துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள கோரிக்கை எழுந்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கரும்பு, நெல், உளுந்து, மக்காசோளம், மரவள்ளி, மஞ்சள் உட்பட பல்வேறு வகையான பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. நடப்பாண்டில் 2,971 விவசாயிகள் 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மக்காசோளம் பயிரிட்டுள்ளனர்.
குறைந்தளவு தண்ணீரே போதுமானதாக உள்ள மக்காச்சோளத்தை, மூன்று மாதங்களில் நன்கு வளர்ந்ததும் அறுவடை செய்து மார்க்கெட் கமிட்டிகள் மற்றும் தனியார் மாவு மில்களுக்கு கொண்டு சென்று விவசாயிகள் விற்பனை செய்கின்றனர்.
ஒரு ஏக்கருக்கு 2000 கிலோ வரை மகசூல் கிடைக்கும். குறைந்த பராமரிப்பில் அதிக விளைச்சலை தருவதால் விவசாயிகள் பலர் ஆர்வமுடன் மக்காச்சோளம் பயிரிட்டு வருகின்றனர்.
சில நாட்களுக்கு முன் பெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையில், 9,500 ஏக்கருக்கும் மேலான பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்ததால், விவசாயிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகினர்.
அதன் தாக்கமே இன்னும் குறையாத நிலையில், தற்போது பருவ நிலை மாற்றம் காரணமாக கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், சின்னசேலம் உட்பட பல்வேறு பகுதிகளில் மக்காசோளம் பயிரில் அமெரிக்கன் படைப்புழு தாக்குதல், விவசாயிகளை மேலும் கவலை அடையச் செய்துள்ளது.
படைப்புழு தாக்குதலால் பாதிப்புக்குள்ளான மக்காசோளம் விவசாய நிலங்களை வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, மேலும் பரவுவதை கட்டுபடுத்த ஆலோசனை வழங்க வேண்டும்.