/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மழையால் மக்காசோளம் பயிர்கள் பாதிப்பு
/
மழையால் மக்காசோளம் பயிர்கள் பாதிப்பு
ADDED : அக் 27, 2025 12:08 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த மக்காசோளம் பயிர்கள் மழையால் பாதிப்புக்குள்ளாகி உள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயம் முக்கிய பிரதான தொழிலாக உள்ளது. கரும்பு, நெல், மரவள்ளி, மஞ்சள் பயிர் சாகுபடி போல் மக்காசோளமும் அதிகளவில் பயிரிடப்பட்டு வருகிறது. சாகுபடிக்கு குறைந்த அளவு தண்ணீர் தேவைப்படும் மக்காச்சோளம், மூன்று மாதங்களில் நன்கு வளர்ந்தது அறுவடைக்கு தயாராகி விடுகிறது.
ஒரு ஏக்கருக்கு 2 ஆயிரம் கிலோ வரை மகசூல் கிடைக்கும். குறைந்த பராமரிப்பில் அதிக விளைச்சல் தருவதால் விவசாயிகள் பலர் ஆர்வமுடன் மக்காச்சோளம் பயிரிட்டு வருகின்றனர். கள்ளக்குறிச்சியில் நுாற்றுக்கணக்கான ஏக்கரில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது.
தற்போது அறுவடைக்கு தயாராக இருந்த மக்காசோளம் சாகுபடி நிலங்களில், தொடர் மழையால் வயல்களில் ஏற்பட்டுள்ள அதிக அளவிலான ஈரப்பதங்களால் இயந்திரங்களை கொண்டு மக்காசோளம் கதிர்களை அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், நாளுக்கு நாள் செடிகள் காய்ந்து வரும் நிலையில், பாரம் தாங்காமல் மக்காசோளம் கதிர்கள் கீழே உதிருந்து விழுந்து வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளன. இதனால் விவசாயிகள் செய்வதறியால் திகைத்து வருகின்றனர்.
சடையம்பட்டு உட்பட பல பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த மக்காசோளம் கதிர்கள் மழையினால் செடிகளிலேயே கதிர்கள் வீணாகி வருகிறது. இதனால் விவசாயிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். எனவே, மாவட்டத்தில் மழை பாதிப்பினால் பாதிக்கப்பட்டுள்ள மக்காசோளம் சாகுபடி வயல்களை வேளாண்மை துறை அலுவலர்கள் ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

