/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
டெங்கு காய்ச்சல் பரவல் தடுப்பு நடவடிக்கை... அவசியம்; பருவ மழையால் கொசு உற்பத்தி அதிகரிப்பு
/
டெங்கு காய்ச்சல் பரவல் தடுப்பு நடவடிக்கை... அவசியம்; பருவ மழையால் கொசு உற்பத்தி அதிகரிப்பு
டெங்கு காய்ச்சல் பரவல் தடுப்பு நடவடிக்கை... அவசியம்; பருவ மழையால் கொசு உற்பத்தி அதிகரிப்பு
டெங்கு காய்ச்சல் பரவல் தடுப்பு நடவடிக்கை... அவசியம்; பருவ மழையால் கொசு உற்பத்தி அதிகரிப்பு
ADDED : ஆக 08, 2025 11:46 PM

தியாகதுருகம், ஆக. 9- பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில் கொசு உற்பத்தியை ஒழித்து டெங்கு உள்ளிட்ட விஷக்காய்ச்சல் பாதிப்பில் இருந்துபொதுமக்களை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கையாக தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பள்ளமான இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.
பெரும்பாலான ஊர்களில் குடியிருப்பு பகுதியில் கழிவுநீரில் மழை நீர் கலந்து துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கொசு உற்பத்தியும் அதிகரித்துள்ளது.
கோடை காலம் முடிந்து மழைக்காலம் துவங்கும் இத்தருணங்களில் கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு, சிக்கன்குனியா, மலேரியா உள்ளிட்ட விஷக்காய்ச்சலால் மக்கள் பாதிக்கும் அபாயம் உள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக டெங்கு காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டு அதில் ஒரு சிலர் உயிரிழந்த சம்பவங்களும் நடந்துள்ளது.
இதிலிருந்து மக்களை பாதுகாக்க நோய் தடுப்பு நடவடிக்கைகளை முன்னெச்சரிக்கையாக மேற்கொள்வது அவசியம். இதற்காக சுகாதாரத்துறை ஊரக வளர்ச்சித் துறை, வருவாய்த்துறை ஆகியவை மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயல்பட்டு நோய் பரப்பும் காரணிகளை கண்டறிந்து அவற்றை அழித்து பாதுகாப்பு பணிகளை தீவிர படுத்த வேண்டும்.
குடியிருப்பு பகுதிகளில் கழிவுநீர் தேங்காமலும், குப்பைகள் சேகரமாகாமலும் துாய்மை பணிகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக டெங்கு கொசு உற்பத்தியாகும் இடங்களில் லார்வா புழுக்களை மருந்து தெளித்து அழிக்க வேண்டும்.
அதேபோல் மாலை நேரங்களில் கொசு மருந்து அடிக்க வேண்டும்.
ஒரு சில நகர மற்றும் கிராம பகுதிகளில் பொது விநியோகத் திட்டத்தில் வழங்கப்படும் குடிநீரில் கழிவு நீர் கலந்து மக்களுக்கு நோய் பரவுகிறது.
அதனை தடுத்து பாதுகாப்பான சுத்தமான குடிநீர் வழங்குவதை ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும். சுகாதாரத்துறை ஊழியர்கள் ஒவ்வொரு கிராமங்களிலும் முகாம் நடத்தி காய்ச்சல் அறிகுறி உள்ளதா என்பதை கண்டறிந்து உடனடியாக மருத்துவ உதவிகளை செய்து தர வேண்டும்.
பலருக்கு காய்ச்சல் பாதிப்பு அறிகுறி தென்பட்டால் மாவட்ட மருத்துவக் குழுவை அனுப்பி மக்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். மழைக்காலங்களில் ஏற்படும் காய்ச்சலுக்கு வசதியானவர்கள் தனியார் மருத்துவமனைகளுக்கே செல்கின்றனர்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மக்களுக்கு உயர் சிகிச்சை கிடைக்காமல் சிரமப்படுகின்றனர். எனவே, அரசு மருத்துவமனையிலும் தரமான சிகிச்சை அளிக்க பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் மக்களை நோய் பாதிப்பிலிருந்து பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.