தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ ஏரி, நீர் வரத்து கால்வாய்கள் பராமரிப்பதில்.... அலட்சியம்! ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறாத அவலம்

ஏரி, நீர் வரத்து கால்வாய்கள் பராமரிப்பதில்.... அலட்சியம்! ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறாத அவலம்

ஏரி, நீர் வரத்து கால்வாய்கள் பராமரிப்பதில்.... அலட்சியம்! ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறாத அவலம்


UPDATED : ஜூலை 01, 2026 04:43 PM

ADDED : ஜூலை 01, 2026 04:41 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 01, 2026 04:43 PM ADDED : ஜூலை 01, 2026 04:41 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏரிகள் மற்றும் நீர் வரத்து வாய்கால்களை துார்வாரி சீரமைக்க அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதால், விவசாயம் கேள்வி குறியாகி வருகிறது. ஆட்சி மாறினாலும், அரசு அதிகாரிகள் செயல்பாடுகள் காட்சி மாறாத நிலையில் உள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கடந்த 2019ம் ஆண்டு, விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து பிரித்து உருவான புதிய மாவட்டம். இது 3,529.67 சதுர கி.மீ., பரப்பளவு கொண்டது. மாவட்டத்தின் பிரதான தொழில் விவசாயம். இங்கு, 1,51,350 ஹெக்டேர் விவசாய நிலம் உள்ளது. ஆனால் குறிப்பிட்ட அளவில் மட்டுமே விவசாயம் நடக்கிறது. இங்கு, நெல், கரும்பு, நிலக்கடலை, மரவள்ளிக்கிழங்கு, சோளம், கம்பு, கேழ்வரகு உள்ளிட்ட பயிர்கள் முக்கியமாக சாகுபடி செய்யப்படுகின்றன. அதேபோல் உளுந்து உள்ளிட்ட குறுகிய கால பயிர்களும் சாகுபடி செய்யப்படுகிறது.

மாவட்டத்தில் கோமுகி, மணிமுக்தா அணைகள் மற்றும் பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகள் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் முக்கிய ஆதாரமாக உள்ளது. பொதுப்பணித்துறை கட்டுபாட்டின் கீழ் இரு அணைகள், மூன்று ஆறுகள், 335 ஏரிகள் உள்ளன. அதேபோல் மாவட்டத்தில் ஊராட்சிகளுக்குட்பட்டு 380 ஏரிகள் உள்ளது. இரு அணைகள் மற்றும் ஏரிகளின் பாசனத்தை நம்பி விவசாய நிலங்கள் உள்ளது.

பருவ மழை காலங்களில் அணைகளில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. ஷெட்டர்கள் திறந்து ஆறுகள் வழியாக தண்ணீர் வெளியேற்றப்படும். ஆறுகளில் உள்ள தடுப்பணைகளிலிருந்து ஏரிகளுக்கு நீர் வரத்து ஏற்படும் கால்வாய்கள் வழியாக தண்ணீர் சென்று ஏரிகள் நிரம்பும்.

இந்நிலையில் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகள் துார்வாரப்படாமல் முறையான பராமரிப்பு இன்றி செடி, கொடிகள் மரங்கள் வளர்ந்து காணப்படுகிறது. பல ஆண்டுகளாக துார்வாரப்படாமல் இருப்பதால் ஏரியின் ஆழம் முற்றிலும் குறைந்துவிட்டது.

ஏரியையொட்டி விவசாய நிலம் வைத்திருப்பவர்கள் சிறிது, சிறிதாக ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருவதால் ஏரியின் பரப்பளவு குறைந்து குட்டையாக மாறிவிட்டது. விரைவில் அந்த குட்டையும் ஆக்கிரமிக்கப்பட்டு ஏரி இருந்த இடம் தெரியாமல் செல்லும் என்பதில் சந்தேகம் இல்லை.

அதேபோல் நீர் வரத்து வாய்க்கால்களில் செடி கொடிகள் வளர்ந்த காலங்கள் மறைந்து, தற்போது மரங்களே வளர்ந்து நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மரம், செடி, கொடி என புதர் மண்டி கிடக்கும் வரத்து வாய்க்கால்கள் சிறிய காடுகள் போல காட்சி அளிக்கிறது. பருவ மழை பெய்து ஆற்றில் தண்ணீர் வந்தாலும், வரத்து வாய்க்கால் வழியாக ஏரி, குளங்களுக்கு தண்ணீர் செல்வது சந்தேகமே.

ஏரி, குளங்கள், ஆறுகளை துார்வார ஒவ்வொரு ஆண்டும் பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித் துறை மூலம் பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால், ஏரி, குளம், ஆறுகள் துார்வாரப்படுவதில்லை. கடந்த 5 ஆண்டுகளாக ஏரிகள் துார்வாரியதாக அலுவலக கணக்கில் மட்டும் செலவுக்கான கணக்கு உள்ளது. ஆனால், ஏரிகள் பல ஆண்டுகளாக அதே நிலையில் உள்ளது. இதனால் பருவ மழை பெய்தும், போதிய அளவு தண்ணீர் தேக்கி வைக்க முடியாமல், கோடை காலத்தில் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அளவுக்கு நிலைமை மோசமாகி வருகிறது.

கலெக்டர் அலுவலகத்தில் மாதந்தோறும் நடக்கும் விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் ஊராட்சிகளுக்குட்பட்ட ஏரிகளை துார்வாருதல், நீர் வரத்து மற்றும் உபரி நீர் கால்வாய்கள் சீரமைப்புக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர். அத்தருணத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவாதம் அளிக்கும் அதிகாரிகள் அதன் பின்பு கண்டுகொள்வது இல்லை.

இம்மாதம் துவங்கி அக்டோபர் வரை தென்மேற்கு பருவ மழையும், அக்டோபர் முதல் வடகிழக்கு பருவ மழை துவங்க உள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக விவசாயிகள் கோரிக்கை விடுப்பதும், ஏரி குளங்கள் துார்வாரப்படவில்லை. தற்போது ஆட்சி மாறியுள்ளது. புதிதாக த.வெ.க., ஆட்சி அமைத்துள்ளது.

அதனால், புதிய ஆட்சியிலாவது பொதுப்பணித்துறை, ஊராட்சிகளுக்கு உட்பட்ட அனைத்து ஏரி, குளங்களை துார்வாரி சீரமைப்பு பணி மேற்கொள்ள அரசு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

'தத்தெடுக்கலாம்' மாவட்டத்தில் உள்ள பெரிய தொழிற்சாலைகள், நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் தங்களின் சமூக பொறுப்புணர்வு நீதி (சி.எஸ்.ஆர்.,) மூலம் அந்தந்த பகுதியில் உள்ள ஏரி, குளங்களை துார்வாரி பராமரிக்கலாம். ஒவ்வொரு கல்வி நிறுவனங்களும் ஒரு ஏரி அல்லது குளத்தை தத்தெடுத்து துார்வாரி, கரைகளை பலப்படுத்தி புனரமைத்தால் நீர் நிலைகளை பாதுகாக்க முடியும். மாணவ சமுதாயமும் ஏரி புனரமைப்பு மரம் வளர்ப்பில் ஈடுப்படுவர். இதற்கு, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us