ADDED : ஆக 14, 2025 12:26 AM

கள்ளக்குறிச்சி : கோமுகி அணைக்கரை பகுதியில் ரூ.5 கோடி மதிப்பிலான புதிய மீன் விதைப் பண்ணையை காணொலி காட்சி மூலம் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
கச்சிராயபாளையம் அருகே உள்ள கோமுகி அணைக்கரை பகுதியில் மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் ரூ.5 கோடி மதிப்பில் புதிதாக மீன் விதை பண்ணை அமைக்கப்பட்டது. இதில் மீன் குஞ்சு நாற்றங்கால் தொட்டி, மீன் குஞ்சு வளர்ப்பு தொட்டி, மீன் குஞ்சு நிலைப்படுத்துதல் மற்றும் சிப்பம் கட்டும் அறை, மேல்நிலை நீர்தேக்க தொட்டி, உட்புற சாலை வசதி, சுற்றுச்சுவர் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டது.
இப்புதிய மீன் விதைப் பண்ணையை சென்னையில் இருந்து முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
அதைத் தொடர்ந்து கலெக்டர் பிரசாந்த், உதயசூரியன் எம்.எல்.ஏ., ஆகியோர் குத்துவிளக்கேற்றி பண்ணை செயல்பாட்டை துவக்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் மீன்வளத்துறை உதவி இயக்குனர் அஜய் ஆனந்த், வடக்கனந்தல் பேரூராட்சி சேர்மன் பன்னீர்செல்வம், சின்னசேலம் ஒன்றிய துணை சேர்மன் அன்புமணிமாறன், பேரூராட்சி துணை தலைவர் தண்டபாணி உட்பட அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.

