ADDED : நவ 15, 2024 04:49 AM

சங்கராபுரத்தில் இலக்கிய விழா
சங்கராபுரத்தில் தமிழ் படைப்பாளர் சங்கம் சார்பில் இலக்கிய விழா நடந்தது.
சங்க தலைவர் டாக்டர் நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார்.துணை தலைவர் கமலநாதன் வரவேற்றார்.சங்கை தமிழ் சங்க தலைவர் சுப்பராயன், தலைமை ஆசிரியர் வீரன் முன்னிலை வகித்தனர்.
இதில் கவிஞர் சந்திரன், டாக்டர் ராஜசேகரன் பேசினர். விழாவில் வணிகர் பேரவை மாவட்ட பொருளாளர் முத்துக்கருப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். துணை செயலாளர் சக்திவேல் நன்றி கூறினார்.
இலவச கண் சிகிச்சை முகாம்
மூங்கில்துறைப்பட்டு அடுத்த வடப்பொன்பரப்பி ஊராட்சி சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. கண் சிகிச்சை முகாமிற்கு ஊராட்சித் தலைவர் சிவமலை தலைமை தாங்கினார். மேல் மருவத்துார் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லுாரி மருத்துவர்கள் கீர்த்தனா, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட குழுவினர் கண்ணில் குறைபாடுகள், கண் புரைவளர்தல், நீர் வடிதல், கிட்டப் பார்வை, துாரப்பார்வை ஆகியவற்றினை கண்டறிந்து சிகிச்சை அளித்தனர்.கண்ணில் குறைபாடுகள் உள்ளவர்களுக்கு அறுவை சிகிச்சை மூலம் சிகிச்சை அளிக்க மேல்மருவத்துார் ஆதிபராசக்தி மருத்துவ கல்லுாரிக்கு பரிந்துரை செய்தனர்.
இலவச சைக்கிள் வழங்கல்
சின்னசேலம் அடுத்த நயினார்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 286 மாணவர்கள், கூகையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 111 மாணவர்கள் என மொத்தம் 397 மாணவர்களுக்கு அரசின் இலவச சைக்கிள்களை மாவட்ட சேர்மன் புவனேஸ்வரி பெருமாள் வழங்கினார். சின்னசேலம் ஒன்றிய சேர்மன் சத்தியமூர்த்தி முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
மாணவர் மன்றம் துவக்கம்
சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் மகிழ்முற்றம் ,மாணவர் மன்றம் துவக்க விழா நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடேசன் தலைமை தாங்கி பேசினார்.
பொறுப்பாசிரியர் மதிவாணன் பேசுகையில் இக் குழவானது ஐந்தினை அணியாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குழுவிற்கும் பொறுப்பசிரியர்கள் நியமணம் செய்யப்பட்டு அணியின் எதிர்கால திட்டங்கள் பற்றி எடுத்துக் கூறினார்.
குழுவின் ஒருங்கிணைப்பாளராக ஆசிரியர்கள் முகமது கவுஸ்,அன்புக்கரசி மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
மாணவிகளுக்கு சீருடை வழங்கல்
சங்கராபுரம் அடுத்த கல்வராயன்மலையை சேர்ந்த பாச்சேரி கிராமத்தில் இயங்கி வரும் கஸ்துார்பா காந்தி பாலிகா வித்யாலயா உண்டு உறைவிட பள்ளியில் மாணவிகளுக்கு சீருடைகள் வழங்கும் விழா நடந்தது.
பள்ளி நிர்வாகி இதாயதுல்லா தலைமை தாங்கினார். மாவட்ட உதவி திட்ட அலுவலர் பழனியாபிள்ளை, மாவட்ட பொறியாளர் ரவி முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் ரம்யா வரவேற்றார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா பள்ளி மாணவிகளுக்கு சீருடைகளையும், விடுதி உபகரணங்களை வழங்கினார்.
போதைப்பொருட்கள் ஒழிப்பு பேரணி
சின்னசேலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
பேரணிக்கு கலால் ஆணையர் குப்புசாமி தலைமை தாங்கினார். கோட்ட கலால் அலுவலர் சிவசங்கரன் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் வேல்முருகன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக டி.ஆர்.ஓ.,சத்தியநாராயணன் பங்கேற்றார்.
சின்னசேலம் தேரோடும் வீதிகள் போதை தடுப்பு குறித்த வாசகங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தியபடி மாணவர்கள் பேரணியாக சென்றனர்.
சிமென்ட் சாலை அமைக்க மனு
உளுந்துார்பேட்டை அடுத்த திருநாவலுார் அருந்ததியர் தெரு பகுதி மக்கள் கலெக்டரிடம் கொடுத்த மனு:
அருந்ததியர் தெருவில் பல குடும்பத்தினர் வசித்து வருகிறோம். முறையான சாலை வசதியின்மையால் மழை காலங்களில் சேரும் சகதியுமாக மாறுவதால் கடும் அவதிக்குள்ளாகி வருகிறோம். இந்நிலையில் அருந்ததியர் தெருவில் சிமென்ட் சாலை அமைக்கக் கோரி இதுவரை 3 முறை மனு அளித்துள்ளோம்.
மேலும், 15 லட்சம் ரூபாய் மதிப்பில் சிமென்ட் சாலை அமைக்கப்படும் என்று உத்தரவாதம் அளிக்கப்பட்டது. ஆனால், இதுவரை அமைக்கப்படாமல் உள்ளது. எனவே, சிமென்ட் சாலை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அம்மனுவில் உள்ளது.
பகுதி நேர ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு பகுதிநேர ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு மாநில இணை செயலாளர் சிவக்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கிளியானந்தம், ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். வரதராஜன், இளங்கோவன், ஆனந்த், தியாகராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.
பின் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனு:
கடந்த 13 ஆண்டுகளாக குறைந்த ஊதியத்தில் பணி செய்யு பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் செய்திட வேண்டும். கோரிக்கை நிறைவேறாதபட்சத்தில், ஒருங்கிணைப்புக்குழு சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள 12,000 பகுதி நேர ஆசிரியர்கள் இணைந்து சென்னை கோட்டை முன் முற்றுகை போராட்டம் நடத்துவோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டட கழிவுகளால் போக்குவரத்து பாதிப்பு
சின்னசேலம் பஸ் நிலையம் விரிவாக்கம் செய்வதற்காக, அங்கிருந்த பேரூராட்சியின் ஓட்டல் மற்றும் ஆறு கடைகள் கடந்த வாரத்தில் இடிக்கப்பட்டன. கட்டட கழிவுகள் முழுமையாக அகற்றப்படாததால், மருத்துவமனை சாலை உள்ளிட்ட பகுதிக்கு வாகனங்கள் செல்ல வழியின்றி உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் வெகுவாக பாதிப்படைந்து வருகின்றனர். எனவே சாலையை அடைத்தபடி உள்ள கட்டட கழிவுகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.