/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தியாகதுருகத்தில் டாஸ்மாக் கடை இடம் மாற்றம் விபத்தை விலை கொடுத்து வாங்கும் அதிகாரிகள்
/
தியாகதுருகத்தில் டாஸ்மாக் கடை இடம் மாற்றம் விபத்தை விலை கொடுத்து வாங்கும் அதிகாரிகள்
தியாகதுருகத்தில் டாஸ்மாக் கடை இடம் மாற்றம் விபத்தை விலை கொடுத்து வாங்கும் அதிகாரிகள்
தியாகதுருகத்தில் டாஸ்மாக் கடை இடம் மாற்றம் விபத்தை விலை கொடுத்து வாங்கும் அதிகாரிகள்
ADDED : மார் 18, 2025 04:25 AM
தியாகதுருகம் நகரில் இருந்த டாஸ்மாக் கடை புறவழிச் சாலையில் மாற்றப்பட்டதால் விபத்து அபாயம் இருக்கும் என்று வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.
தியாகதுருகம் புக்குளம் பஸ் நிறுத்தம் அருகே டாஸ்மாக் கடை இயங்கி வந்தது. இதன் அருகே முருகன் கோவில் உள்ளதாலும், பள்ளி மாணவர்கள் இவ்வழியே செல்வதாலும் இதனை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இது குறித்து 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக புதிதாக அமைக்கப்பட்ட தியாகதுருகம் புறவழிச் சாலையில் நேற்று முன்தினம் டாஸ்மாக் கடை மாற்றப்பட்டது.
பள்ளமாக இருந்த இப்பகுதியை செப்பனிட்டு 6 அடி உயரத்திற்கு உயர்த்தி சாலை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதால் மது பாட்டில் வாங்க செல்வோர்களின் இருசக்கர வாகனங்கள் சாலையின் இருபுறமும் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்துகின்றனர்.
சிலர் மது பாட்டிலை வாங்கி அருகில் உள்ள வயல்வெளியில் அமர்ந்து குடிப்பதால் போக்குவரத்து இடையூறாக வாகனங்கள் எப்போதும் நிறுத்தப்படுகின்றன. நேற்று முன்தினம் மாலை தியாகதுருகம் போலீசார் 10க்கும் மேற்பட்டோர் இப்பகுதியில் வாகனங்களை ஒழுங்குபடுத்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தினமும் முழுநேரமும் இதே போன்ற பணியை போலீசாரால் செய்ய முடியாது. இதற்கு முன் டாஸ்மாக் கடை இருந்த இடம் பொது மக்களுக்கு இடையூறாக இருந்த காரணத்தினால் தான் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது.
அவ்வாறு மாற்றப்பட்ட புதிய இடம் விபத்தை விலை கொடுத்து வாங்கும் அளவுக்கு சிக்கலான இடத்தில் அதிகாரிகள் கடையை அமைத்தது வாகன ஓட்டிகளை அச்சமடைய செய்துள்ளது.
நகரில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவே புறவழிச் சாலை புதிதாக அமைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, திருக்கோவிலுார் சாலை மார்க்கமாக செல்லும் பலர் இவ்வழியை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
தற்போது டாஸ்மாக் கடை திறக்கப்பட்டு எந்நேரமும் குடிமகன்களின் நடமாட்டம் இங்கு உள்ளதால் பெண்கள் இவ்வழியே செல்வதற்கு அச்சப்படுகின்றனர்.
போக்குவரத்து அதிகம் இல்லாத ஒதுக்குப்புறமான இடத்திற்கு கடையை உடனடியாக மாற்ற வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.