/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
நம்ம பள்ளி, நம்ம வாத்தியார்... காமராஜர் விருது பெற்ற குதிரைச்சந்தல் அரசு மேல்நிலைப்பள்ளி
/
நம்ம பள்ளி, நம்ம வாத்தியார்... காமராஜர் விருது பெற்ற குதிரைச்சந்தல் அரசு மேல்நிலைப்பள்ளி
நம்ம பள்ளி, நம்ம வாத்தியார்... காமராஜர் விருது பெற்ற குதிரைச்சந்தல் அரசு மேல்நிலைப்பள்ளி
நம்ம பள்ளி, நம்ம வாத்தியார்... காமராஜர் விருது பெற்ற குதிரைச்சந்தல் அரசு மேல்நிலைப்பள்ளி
ADDED : ஜூலை 06, 2025 04:39 AM

கள்ளக்குறிச்சி நகரின் அருகில் 5 கி.மீ., தொலைவில் கச்சிராயப்பாளையம் சாலையில் 6 ஏக்கர் 25 சென்ட் பரப்பளவில் குதிரைச்சந்தல் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. கடந்த 1981ம் ஆண்டு ஜூன் 16ம் தேதி உயர்நிலைப் பள்ளியாக துவங்கப்பட்டு, கடந்த 2012ம் ஆண்டு ஜூன் மாதம் 8ம் தேதி மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இப்பள்ளியில் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் என 33 பேர் பணிபுரிந்து வருகின்றனர்.
எழில்மிகு நுழைவு வாயில், காண்போரைக் கவரும் வகையில் அழகு தாவரங்கள் பள்ளிக்கு அழகு சேர்க்கும் வகையில் உள்ளது.
கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் 'ஸ்மார்ட் போர்டு' வகுப்பறையும், தொழில்நுட்ப திறனை மேம்படுத்தும் வகையில் நவீன கணினிக்கூடமும், ஆய்வகமும் அமைக்கப்பட்டுள்ளது. காற்றோட்டமான வகுப்பறைகளும், விளையாட்டு திறனை ஊக்குவித்திட அதிகளவு பரப்பளவு கொண்ட மைதானமும் உள்ளது. தனியார் பள்ளிகளுக்கு இணையாக, பள்ளி வளாகத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மேலும், சுகாதாரமான குடிநீர், கழிவறை வசதிகள் உள்ளன.
'தினமலர் - பட்டம்' நாளிதழ்
மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்த, வாசிப்பு இயக்கம் தொடங்கப்பட்டு தேன்சிட்டு, 'தினமலர்' நாளிதழின் மாணவர் பதிப்பான 'பட்டம் இதழ்' மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. மாணவர்கள் மொழியை சரளமாக பேசுவதற்காக, தினமும் காலையில் நடைபெறும் வழிபாட்டு கூட்டத்தில் தமிழ் மற்றும் ஆங்கில செய்திகள் வாசிக்கப்படுகிறது.
தமிழ் இலக்கிய மன்றம், சுற்றுச்சூழல் மன்றம், வானவில் மன்றம், கணிதம், சமூக அறிவியல், ஆங்கில மன்றங்கள் மூலம் வாரம்தோறும் வியாழக்கிழமைகளில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
விருதுகளைக் குவித்த பள்ளி
இப்பள்ளி கடந்த 2023-2024ம் கல்வியாண்டில் 'காமராஜர் விருது'க்கு தேர்வு செய்யப்பட்டு, அரசால் 1 லட்சம் ரூபாய் பரிசு பெற்றுள்ளது என்பது கூடுதல் சிறப்பாகும். அதே கல்வியாண்டில் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற கலெக்டர் பள்ளியின் சிறப்பம்சங்களை பார்த்து 'எங்கள் பள்ளி, மிளிரும் பள்ளி' என பாராட்டினார். மேலும், கடந்த 2022-23ம் கல்வியாண்டில் 'நெகிழி இல்லா உலகைப்படைப்போம்' என்ற தலைப்பில் மாவட்ட அளவில் நடந்த 'மஞ்சப்பை விருது'க்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியில், பள்ளி மாணவர்கள் பங்கேற்று இரண்டாமிடத்தை பிடித்து, கலெக்டரால் பாராட்டு பெற்றனர்.
பல்வேறு துறைகளை சேர்ந்த வல்லுநர்களை கொண்டு கருத்தரங்கமும், தன்னம்பிக்கையூட்டும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பள்ளியின் வளர்ச்சியில், பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் பள்ளி மேலாண்மை குழு மிகுந்த அக்கறை செலுத்துகிறது. இளஞ்செஞ்சிலுவை சங்கம், சாரண - சாரணியர் இயக்கம், தேசிய மாணவர் பசுமைப்படை ஆகிய இயக்கங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
விளையாட்டுத் துறை
மாணவ, மாணவியர்களின் உடல் நலனைக் கருத்தில் கொண்டு பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது. மேலும், அரசு சார்பில் நடத்தப்படும் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாவட்ட அளவில் நடைபெறும் மிதிவண்டி போட்டியில், இப்பள்ளி மாணவ, மாணவிகள் தொடர்ந்து 3 ஆண்டுகளாக வெற்றி பெற்று 7,500 ரூபாய் பரிசு பெற்றுள்ளனர்.
மேலும், மாவட்ட, மாநில அளவிலான நீச்சல் போட்டி, வாள் வீச்சு, எறிபந்து, மதிவண்டி, தடகளம், சிலம்பம், சதுரங்கம், கேரம், கைப்பந்து, கபடி போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்று வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
'முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி'யில் இப்பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று 25 ஆயிரம் ரூபாய் பரிசு பெற்றுள்ளனர். மேலும், பெண் ஆசிரியர்கள் முதலமைச்சர் கோப்பைக்கான கபாடி, கைப்பந்து, இறகுப்பந்து, சதுரங்கம் ஆகிய போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று 50 ஆயிரம் ரூபாய் பரிசு பெற்றுள்ளனர்.
மருத்துவ படிப்பில் மாணவர்கள்
அரசு பொதுத்தேர்வுகள் மட்டுமின்றி, உயர்கல்வி படிப்புக்கான நுழைவுத்தேர்வுகளிலும் மாணவர்கள் தேர்ச்சி பெற்று சாதனை படைத்து வருகின்றனர். முன்னாள் மாணவர்கள் பாலசந்தர், அஜய் அலெக்சாண்டர் ஆகியோர் 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற்று, 7.5 சதவீத அரசு இடஒதுக்கீட்டில் மருத்துவ படிப்புகளில் சேர்ந்துள்ளனர்.
சிறப்பான பயிற்றுநர்கள், ஆசிரியர்களைக் கொண்டு 55 சாரண, சாரணியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் மேலேரியில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணா கல்வியியல் கல்லுாரியில் 3 நாட்கள் சோதனை முகாமில் 11 மாணவ, மாணவிகள் பங்கேற்று பணியை சிறப்பாக மேற்கொண்டனர்.
ஜூனியர் ரெட் கிராஸ்
பள்ளி துவங்கிய காலத்தில் இருந்து மாணவர்களுக்கு ஜே.ஆர்.சி., பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ஆசிரியர் பழனிசாமி ஜே.ஆர்.சி., அமைப்பின் ஆலோசராக இருந்து மாணவர்களுக்கு சுகாதாரம், சேவை, நட்புணர்வு என்பதை தாரக மந்திரமாக கொண்டு சேவைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி வருகிறார். மாணவர்களும் பல்வேறு முகாம்களில் பங்கேற்று சான்றிதழ்களை பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்து வருகின்றனர்.
பள்ளி உடற்கல்வி ஆசிரியை கலைச்செல்வி தினமும் மாலை நேரத்தில் மாணவர்களுக்கு சதுரங்க விளையாட்டு பயிற்சி அளத்து வருகிறார். விளையாட்டுகளில் ஆர்வமுள்ள மாணவர்கள் பலர் சதுரங்க விளையாட்டு பயிற்சியினை பெறுகின்றனர்.