/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
நிழற்குடை பிரச்னை தொடர்பாக அமைதி பேச்சுவார்த்தை
/
நிழற்குடை பிரச்னை தொடர்பாக அமைதி பேச்சுவார்த்தை
ADDED : ஜன 17, 2024 07:33 AM
திருக்கோவிலுார் : மணலுார்பேட்டையில் வரும் 20ம் தேதி தே.மு.தி.க., சார்பில் அறிவிக்கப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டம் சம்மந்தமான சமாதான கூட்டம் தீர்வு ஏற்படாமல் முடிந்தது.
திருவண்ணாமலை - தியாகதுருகம் சாலையில் மணலுார்பேட்டை, ஆஞ்சநேயர் கோவில் அருகே மறைந்த தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தால் கட்டப்பட்ட நிழற்குடை மழை நீர் வடிகால் பணிக்காக நெடுஞ்சாலை துறையால் அகற்றப்பட்டது.
மீண்டும் அதே இடத்தில், அதே பெயரில் கட்டிக் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வரும் 20ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தே.மு.தி.க., தலைமை அறிவித்திருந்தது.
இந்நிலையில் நேற்று திருக்கோவிலுார் டி.எஸ்.பி., மனோஜ் குமார் தலைமையில் அமைதி பேச்சு வார்த்தை நடந்தது. நெடுஞ்சாலைத்துறை திருக்கோவிலுார் உதவி கோட்ட பொறியாளர் எபினேசர் அன்புராஜ், உதவி பொறியாளர் புகழேந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தே.மு.தி.க., சார்பில் மாவட்ட பொருளாளர் கருணாகரன் உள்ளிட்ட நிர்வாகி பலரும் பங்கேற்றனர்.
வரும் 19ம் தேதி ஆற்று திருவிழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டி இருப்பதால் பேச்சுவார்த்தை மூலம் இப் பிரச்னைக்கு தீர்வு காணலாம். அதுவரை போராட்டத்தை ஒத்தி வைக்குமாறு போலீஸ் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
விரைவில் கள்ளக்குறிச்சி ஆர்.டி.ஓ., தலைமையில் நடைபெற உள்ள சமாதான கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கலாம் என, நெடுஞ்சாலை துறை தரப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டது.
தே.மு.தி.க., சார்பில் கட்சித் தலைமை அறிவித்த போராட்டம் குறித்து தலைமையுடன் பேசி கருத்து தெரிவிப்பதாக கூறினர்.
இதனால் பேச்சு வார்த்தையில் எந்த தீர்வும் ஏற்படவில்லை.

