/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தொடர் திருட்டு சம்பவங்களால் மக்கள் அச்சம்! மர்ம நபர்களை கைது செய்ய முடியாமல் போலீஸ் திணறல்
/
தொடர் திருட்டு சம்பவங்களால் மக்கள் அச்சம்! மர்ம நபர்களை கைது செய்ய முடியாமல் போலீஸ் திணறல்
தொடர் திருட்டு சம்பவங்களால் மக்கள் அச்சம்! மர்ம நபர்களை கைது செய்ய முடியாமல் போலீஸ் திணறல்
தொடர் திருட்டு சம்பவங்களால் மக்கள் அச்சம்! மர்ம நபர்களை கைது செய்ய முடியாமல் போலீஸ் திணறல்
ADDED : ஆக 18, 2025 12:29 AM

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடர்ந்து நடந்து வரும் திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்களால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட மர்ம நபர்களை கைது செய்ய முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளது. குறிப்பாக ஆளில்லாத வீடுகளை நோட்டமிட்டு பூட்டை உடைத்து உள்ளே இருந்து நகை பணம் கொள்ளை அடிப்பது தொடர்கதையாக உள்ளது. அதேபோல் வழிப்பறி சம்பவமும் அதிகரித்துள்ளது.
கடந்த மாதம் 22ம் தேதி புது உச்சிமேடு கிராமத்தைச் சேர்ந்த சோமசுந்தரம், 70; கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் உள்ள ஏ.டி.எம்., மையத்தில் பணம் எடுக்க சென்றபோது அவரை ஏமாற்றி 45 வயது மதிக்கத்தக்க மர்மநபர் ரூ.15 ஆயிரம் பணத்தை அபேஸ் செய்தார்.
கடந்த 30 ம் தேதி திருநாவலுார் அருகே ஆம்னி பஸ்சில் சென்ற சென்னை குளத்துாரை சேர்ந்த பேச்சுமுத்து, 62; என்பவரிடமிருந்து ரூ 6.5 லட்சம் பணத்தை மர்ம நபர் திருடி சென்றார். கடந்த 31ம் தேதி மலைக் கோட்டாலம் கிராமத்தில் டிரான்ஸ்பார்மரை உடைத்து காப்பர் கம்பியை திருடி சென்றனர். கடந்த 1ம் தேதி உளுந்துார்பேட்டை அடுத்த எம்.எஸ்., தக்காவில் நிர்மல் பட்டேல் என்பவரின் ஹார்டுவேர் கடையில் இரவு மர்ம நபர்கள் உள்ளே புகுந்து ரூ.1.80 லட்சம் பணத்தை திருடி சென்றனர்.
கடந்த 2ம் தேதி பரிகம் கிராமத்தைச் சேர்ந்த ராஜாகண்ணு மனைவி மாரியம்மாள், 45; கள்ளக்குறிச்சியில் தனியார் கடையில் அடகு வைத்திருந்த 2 சவரன் நகையை மீட்டு வீட்டிற்கு பஸ்சில் சென்றபோது அக்கராபாளையம் பஸ் நிறுத்தம் அருகே மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
கடந்த 3ம் தேதி சாத்தபுத்துார் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் மனைவி காயத்ரி, 26; கள்ளக்குறிச்சியில் இருந்து பஸ்சில் வடதொரசலுார் சென்ற போது அவர் பரிசில் வைத்திருந்த ரூ. 4 ஆயிரம் மற்றும் ஏ.டி.எம்., கார்டுகள் திருடு போனது. கடந்த 6ம் தேதி கள்ளக்குறிச்சி ஏமப்பேர் பஸ் நிறுத்தம் அருகே சின்னதுரை, 40; என்பவரின் டீக்கடையில் இரவு நேரத்தில் உள்ளே புகுந்து ரூ.25 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
இதே தேதியில் கள்ளக்குறிச்சி நகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து மாத்திரை வாங்கி சென்ற வசந்தா, 72; என்ற மூதாட்டியிடம் 2 மர்ம நபர்கள், போலீசார் போல் நடித்து 4.5 சவரன் நகையை திருடி சென்றனர்.
கடந்த 7ம் தேதி முடியனுார் ஏழுமலை மனைவி வெண்ணிலா, 38; மொபெட்டில் சென்று கொண்டிருந்தபோது அவர் கழுத்தில் இருந்த செயினை பின்புறமாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம பறிக்க முயன்றார். சுதாரித்துக் கொண்டு வெண்ணிலா சத்தம் போட்டதால் செயின் தப்பியது. கடந்த 10ம் தேதி கச்சிராயபாளையம் அடுத்த ஏர்வாய்பட்டினம் நல்லதங்காள் கோவில் மற்றும் அம்மாபேட்டை முத்துமாரியம்மன் கோவில் உண்டியலை உடைத்து ரூ.50 ஆயிரம் காணிக்கை பணம் திருடுபோனது. கடந்த 12 ம் தேதி மட்டும் 3 இடங்களில் திருட்டு சம்பவங்கள் நடந்து பரபரப்பை ஏற்படுத்தியது.
தியாகதுருகம் துணை மின் நிலையம் எதிரில் ஆசிரியர் வெங்கடேசன், 44; வீட்டை உடைத்து 4 சவரன் நகை, ரூ. 75 ஆயிரம் பணமும், பெரியமாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கட்டட மேஸ்திரி சண்முகம், 40; வீட்டை உடைத்து 5 சவரன் நகை, 2 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ. 1.5 லட்சம் பணத்தை திருடிச் சென்றனர்.
கொங்கராயபாளையம் கிராமத்தில் வயலில் வேலை செய்த ரமேஷ் மனைவி சுங்கமித்திரை, 47; அணிந்திருந்த 8 சவரன் தாலி செயினை, 17 வயது மதிக்கத்தக்க சிறுவன் அறுத்துக் கொண்டு தப்பியோடினான். அதேபோல் ஆகஸ்ட் 15ம் தேதி 3 இடங்களில் தொடர் திருட்டு சம்பவம் அரங்கேறியது. சோழம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த செல்வேந்திரன் மனைவி உஷா, 35; சங்கராபுரம் பஸ் நிலையத்தில் அரசு டவுன் பஸ்ஸில் சென்றபோது பையில் வைத்திருந்த 3 கிராம் தங்க காசு, ரூ.40 ஆயிரம் பணத்தை அபேஸ் செய்தனர்.
விருகாவூர் கிராமத்தைச் சேர்ந்த அசோகன், 60; என்பவர் கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை எதிரில் நிறுத்தி சென்ற பைக்கை மர்ம நபர்கள் திருடி சென்றனர். கச்சிராயபாளையம் அடுத்த கரடிசித்துார் கிராமத்தைச் சேர்ந்த சவுமியா, 23; வீட்டை உடைத்து 250 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் 1000 ரூபாய் பணத்தை திருடி சென்றனர்.
இப்படி ஒரே நாளில் பல திருட்டு சம்பவங்கள் நடந்தும் இதுவரை போலீசார் குற்றவாளிகளை கைது செய்யவில்லை.
கடந்த மாதம் 21ம் தேதி தியாகதுருகம் அருகே ஏ.டி.எம்., நிறுவன ஊழியரின் முகத்தில் மிளகாய் பொடி துாவி அவரிடம் இருந்த ரூ.6 லட்சம் பணத்தை 2 பேர் திருட முயன்ற போது அதில் ஒருவரை பொதுமக்களை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இப்படி, பொதுமக்களே திருடர்களை பிடித்து போலீசில் ஒப்படைத்தால் தான் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்ற அவல நிலை உள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாளுக்கு நாள் திருட்டு சம்பவங்களும் வழிப்பறியும் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். வீட்டை பூட்டி வெளியூர் செல்ல தயக்கம் காட்டி வருகின்றனர். மாவட்ட போலீசார் விழிப்புடன் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. மாவட்ட போலீஸ் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-நமது நிருபர்-