/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
போக்குவரத்து மிகுந்த சாலையை அகலப்படுத்த மக்கள் கோரிக்கை
/
போக்குவரத்து மிகுந்த சாலையை அகலப்படுத்த மக்கள் கோரிக்கை
போக்குவரத்து மிகுந்த சாலையை அகலப்படுத்த மக்கள் கோரிக்கை
போக்குவரத்து மிகுந்த சாலையை அகலப்படுத்த மக்கள் கோரிக்கை
ADDED : டிச 09, 2025 03:44 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி நகர் பகுதியில் வாகன போக்குவரத்து அதிகம் உள்ள தியாகதுருகம் சாலையை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கள்ளக்குறிச்சி - தியாகதுருகம் சாலை முக்கியத்துவம் வாய்ந்த சாலை. சென்னை, திண்டிவனம், விழுப்புரம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கள்ளக்குறிச்சி நகருக்கு தியாகதுருகம் சாலை வழியாக மட்டுமே வரவேண்டியுள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் இருந்து கள்ளக்குறிச்சி பஸ் நிலையம் வரையிலான தியாகதுருகம் சாலை மூன்று கிலோ மீட்டர் நீளம் கொண்டுள்ளது.
நெடுஞ்சாலை துறை கட்டுபாட்டில் உள்ள இச்சாலை வழியாக சென்னை, சேலம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏராளமான வாகனங்கள் வந்து செல்கிறது. நகரின் முக்கியத்துவம் வாய்ந்த இச்சாலையில் பெட்ரோல் பங்க், கல்வி நிறுவனங்கள், வங்கிகள், வணிக நிறுவனங்களும் அமைந்துள்ளன.
வெளியூர் செல்லும் வாகனங்கள் மட்டுமின்றி, உள்ளூர் வாகனங்களும் இந்த சாலையை தான் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இச்சாலை குறுகியதாக இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாவதோடு, அடிக்கடி விபத்துக்களும் நடக்கிறது.
பஸ் நிலையத்தில் இருந்து வரும் பஸ்கள் மட்டுமின்றி, பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் செல்ல முடியாமல் சிக்கி தவிக்கின்றனர். கனரக வாகனங்கள் ஒன்றையொன்று கடந்து செல்லும் போது மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றன.
இச்சாலையை அகலப்படுத்த வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலன் கருதி சாலையை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

