/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
போக்குவரத்து நெரிசலால் பொது மக்கள் கடும் அவதி! சாலையை அகலப்படுத்த நடவடிக்கை தேவை
/
போக்குவரத்து நெரிசலால் பொது மக்கள் கடும் அவதி! சாலையை அகலப்படுத்த நடவடிக்கை தேவை
போக்குவரத்து நெரிசலால் பொது மக்கள் கடும் அவதி! சாலையை அகலப்படுத்த நடவடிக்கை தேவை
போக்குவரத்து நெரிசலால் பொது மக்கள் கடும் அவதி! சாலையை அகலப்படுத்த நடவடிக்கை தேவை
ADDED : நவ 06, 2025 05:00 AM

கச்சிராயபாளையம்: கச்சிராயபாளையத்தில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். கச்சிராயபாளையம் சுற்றியுள்ள கிராம மக்கள் தங்களின் முக்கிய தேவைகளுக்காக கச்சிராயபாளையம் வந்து செல்கின்றனர். இங்கிருந்து சென்னை, சேலம், திருச்சி, பெரம்பலுார், கடலுார், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது.
கச்சிராயபாளையம் சுற்றுபுற பகுதி மற்றும் கல்வராயன்மலை பகுதிகளை சேர்ந்த பொது மக்கள் மாவட்ட தலைநகரான கள்ளக்குறிச்சி செல்வதற்கு கச்சிராயபாளையம் வழியாக செல்ல வேண்டி உள்ளது.
கள்ளக்குறிச்சி, சின்னசேலம் பகுதிகளிலிருந்து பல்வேறு கிராமங்களுக்கு கச்சிராயபாளையம் வழியாக தினமும் நுாற்றுகணக்கான டவுன் பஸ்கள் இயக்கப்படுகிறது.
இதுதவிர, கள்ளக்குறிச்சி, தியாகதுருகம், சின்னசேலம், தலைவாசல், ஆத்துார், சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கும் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளின் 200 க்கும் மேற்பட்ட வாகனங்கள் கச்சிராயப்பாளையம் வழியாக மாணவர்களை அழைத்து செல்கின்றனர்.
இங்குள்ள கச்சிராயபாளையத்தில் கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கப்படும் காலத்தில் தினமும் ஆயிரங்கணக்கான கரும்பு லோடு டிராக்டர்கள், கச்சிராயபாளையம் , காமராஜர் சாலை வழியாக செல்கின்றன. மேலும் கல்வராயன்மலை மற்றும் கச்சிராயபாளையம் பகுதியில் அறுவடை செய்யப்படும் மரவள்ளி கிழங்குகள் சேலம் மாவட்டத்தில் இயங்கும் ஜவ்வரசி ஆலைகளுக்கும், நெல் கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கு லாரிகள் மூலம் எடுத்து செல்லப்படுகிறது. இதுதவிர, வாரந்தோறும் கச்சிராயபாளையம் புதிய பஸ் நிலையத்தில் வாரச்சந்தை நடந்து வருகிறது.
இப்படி நுாற்றுக்கணக்கான அரசு மற்றும் தனியார் பஸ்கள், பள்ளி, கல்லுாரி வாகனங்கள் மற்றும் விவசாய பொருட்களை எடுத்து செல்லும் லாரிகள் என தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் கச்சிராயபாளையம் காமராஜர் சாலை வழியாக செல்கிறது.
காமராஜர் சாலை மற்றும் எல். எப்., சாலை ஆகியவை போலீஸ் ஸ்டேஷன் துவங்கி அம்மாபேட்டை வரை சாலை மிகவும் குறுகலாக உள்ளது.
ஒரே நேரத்தில் இரண்டு பஸ்கள் கடந்து செல்ல முடியாத அளவில் உள்ளது. குறிப்பாக லோடு வாகனங்கள் செல்லும் நேரங்களில் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
கச்சிராயபாளையம் பகுதியில் இயங்கும் கடைகளுக்கு பொருட்கள் மற்றும் சிமெண்ட் லோடு இறக்கும் போது அதிகளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சாலை ஓரங்களில் தாறுமாறாக நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களால் பொது மக்கள் நடந்து செல்ல இடமின்றி டிராபிக்ஜாம் ஏற்படுகிறது.
சாலை ஓரங்களில் நிறுத்தப்படும் பைக்குகளை ஒழுங்குபடுத்த கச்சிராயபாளையம் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. இச்சாலையில் கலக்டரின் வாகனம் கூட, பல நேரங்களில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய சம்பவங்களும் நடந்துள்ளது.
இந்த சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை சார்பில் பலமுறை அளவீடு செய்யும் பணிகள் நடத்தி, எவ்வளது துாரம் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர் என குறித்து வைத்துள்ளனர்.
ஆனால், வழக்கம்போல் ஆக்கிரமிப்பு அகற்றாமல் அதிகாரிகள் அமைதியாகி விடுகின்றனர். கச்சிராயபாளையம் காமராஜர் சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை அகலபடுத்த அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

