/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மார்க்கெட் கமிட்டிகளில் கொள்முதல் தொகை... ரூ.124.21 கோடி:8 மாதத்தில் 63,829 விவசாயிகள் பயன்
/
மார்க்கெட் கமிட்டிகளில் கொள்முதல் தொகை... ரூ.124.21 கோடி:8 மாதத்தில் 63,829 விவசாயிகள் பயன்
மார்க்கெட் கமிட்டிகளில் கொள்முதல் தொகை... ரூ.124.21 கோடி:8 மாதத்தில் 63,829 விவசாயிகள் பயன்
மார்க்கெட் கமிட்டிகளில் கொள்முதல் தொகை... ரூ.124.21 கோடி:8 மாதத்தில் 63,829 விவசாயிகள் பயன்
ADDED : டிச 06, 2025 05:43 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 7 மார்க்கெட் கமிட்டிகளில் நடப்பாண்டில்கடந்த 8 மாதங்களில் 63,829 விவசாயிகள் கொண்டு வந்த 39338.136 மெட்ரிக் டன் விளை பொருட்கள் ரூ.124.21 கோடிக்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயம் பிரதான தொழில். மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுபாட்டில் உள்ள கோமுகி, மணிமுக்தா அணைகள், மூன்று ஆறுகள், 335 ஏரிகளும், பஞ்சாயத்திற்குட்பட்டு 380 ஏரிகள் உள்ளிட்ட நீர் நிலைகள் விவசாய பாசனத்திற்கு முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது.
பருவ மழை காலங்களில் நிரம்பும் நீர் நிலைகளை நம்பி விவசாயிகள் நீண்டகால மற்றும் குறுகிய கால பயிர்களை சாகுபடி செய்கின்றனர். அதேபோல் நீர் பாசனம் பெறமுடியாத மானவாரி விவசாய நில பரப்புகளில் பருவ மழை மற்றும் பருவ நிலை மாற்றத்திற்கேற்ப விவசாயிகள் குறுகிய கால பயிர்களான உளுந்து, கம்பு, எள் ஆகியவற்றை பயிரிடுகின்றனர்.
மாவட்டத்தில் நெல், மக்காசோளம், கம்பு, மணிலா, எள், உளுந்து ஆகிய பயிர்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதனையொட்டி விவசாயிகள் நலனுக்காக மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, உளுந்துார்பேட்டை, சங்கராபுரம், மணலுார்பேட்டை, தியாகதுருகம், சின்னசேலம், திருநாவலுார் ஆகிய இடங்களில் மார்க்கெட் கமிட்டிகள் செயல்பட்டு வருகிறது.
இங்கு விவசாயிகள் நாள்தோறும் தங்களது விவசாய விளை பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.
இதனை உள்ளூர் மற்றும் வெளி மாவட்ட வியாபாரிகள் விவசாய பொருட்களை கொள்முதல் செய்கின்றனர். மாவட்டத்தில் உள்ள 7 மார்க்கெட் கமிட்டில்களிலும் ஆண்டுதோறும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் வர்த்தகம் நடக்கிறது.
அதன்படி, நடப்பாண்டு ஏப்.,1 முதல் கடந்த நவ., 30ம் தேதி வரை கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டிக்கு 25,673 விவசாயிகள் கொண்டு வந்த 8775.957 மெ.டன் விளை பொருட்கள் ரூ.51 கோடியே 21 லட்சத்திற்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் உளுந்துார்பேட்டை கமிட்டியில் 22,597 விவசாயிகள் கொண்டு வந்த 17873.495 மெ.டன் விளை பொருட்கள் ரூ. 45 கோடியே 59 லட்சத்திற்கு கொள்முதல் செய்யப்பட்டது. சங்கராபுரம் மார்க்கெட் கமிட்டியில் 4,325 விவசாயிகள் கொண்டு வந்த 6036.021 மெ.டன் விளை பொருட்கள் ரூ.12 கோடியே 75 லட்சத்திற்கு கொள்முதல் ஆனது.
மணலுார்பேட்டை மார்க்கெட் கமிட்டியில் 3084 விவசாயிகள் கொண்டு வந்த 2683.793 மெ.டன் விளை பொருட்கள் ரூ. 4 கோடியே 44 லட்சத்திற்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தியாகதுருகம் கமிட்டியில் 5016 விவசாயிகள் கொண்டு வந்த 2956.314 மெ.டன் விளை பொருட்கள் ரூ.7 கோடியே 19 லட்சத்திற்கும், சின்னசேலம் கமிட்டியில் 1572 விவசாயிகள் கொண்டு வந்த 769.524 மெ.டன் விளை பொருட்கள் ரூ. 2 கோடியே 26 லட்சத்திற்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
திருநாவலுார் கமிட்டியில் 1562 விவசாயிகள் கொண்டு வந்த 243.032 மெ.டன் விளை பொருட்கள் ரூ.73 லட்சத்திற்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
tமாவட்டத்தில் உள்ள 7 மார்க்கெட் கமிட்டிகளில் நடப்பாண்டு இதுவரை (8 மாதங்கள்) 39,338.136 மெ.டன் விவசாய விளை பொருட்கள் ரூ.124 கோடியே 21 லட்சத்திற்கு வர்த்தகம் நடந்துள்ளது.
மார்க்கெட் கமிட்டிகள் மூலம் மொத்தம் 63,829 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். தற்போது பருவ மழை துவங்கி இரவை மற்றும் மானாவரி நிலங்களில் பயிர் சாகுபடியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
விவசாயிகளின் விளைபொருட்களுக்கு
உரிய விலை கிடைக்க நடவடிக்கை
விழுப்புரம் விற்பனைக்குழு செயலாளர் சந்துரு கூறியதாவது; கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மார்க்கெட் கமிட்டிகளில் அவ்வப்போது விவசாயிகள் கருத்துகளை கேட்டறிந்து தேவையான வசதிகள் செய்யப்படுகிறது. விளை பொருட்கள் கொள்முதல் செய்யும் வியாபாரிகள், குறிப்பிட்ட நேரத்திற்குள் உடனடியாக விவசாயிகளுக்கு பணப்பட்டுவடா செய்வது தொடர்பாகவும் கண்காணிக்கப்படுகிறது. மாவட்டத்தில் நடப்பாண்டு 7 மார்க்கெட் கமிட்டிகள் மூலம் 2 லட்சம் மெ.டன் விளை பொருட்கள் கொள்முதல் செய்வதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் இதுவரை 40 ஆயிரம் மெ.டன் விளை பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. தற்போது பருவ மழை பெய்து வரும் நிலையில், இரவை மற்றும் மானாவாரி நிலங்களில் விவசாயிகள் பயிர் சாகுபடியில் தீவிரம் காட்டியுள்ளனர். இதனால் வரும் காலங்களில் பயிர்கள் அறுவடை செய்யப்படும் நிலையில், கமிட்டிகளுக்கு விளை பொருட்கள் வரத்து அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளன. அரசின் நேரடி கட்டுபாட்டில் விவசாயிகளின் விளை பொருட்களுக்கு, உரிய விலை கிடைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால் மார்க்கெட் கமிட்டிகளை பயன்படுத்தி விவசாயிகள் பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

