பிரேத பரிசோதனை செய்வதில் தாமதம்: கள்ளக்குறிச்சியில் உறவினர்கள் மறியல்
பிரேத பரிசோதனை செய்வதில் தாமதம்: கள்ளக்குறிச்சியில் உறவினர்கள் மறியல்
UPDATED : ஆக 20, 2026 08:51 PM
ADDED : ஆக 20, 2026 08:11 PM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் இறந்தவர் உடலை பிரேத பரிசோதனை செய்வதில் தாமதமானதால் ஆத்திரமடைந்த உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சங்கராபுரம் அடுத்த சேஷசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன் மகன் பாஸ்கரன், 37; இவர் நேற்று முன்தினம் இரவு 8:45 மணியளவில் தனது நிலத்தில் மயங்கி விழுந்து கிடந்தார்.
உடன், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்ததில் அவர் இறந்தது தெரியவந்தது.
இதனையடுத்து பாஸ்கரன் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டது.
நேற்று பிற்பகல் 2:00 மணி வரை பாஸ்கரன் உடலை பிரேத பரிசோதனை செய்யாததால் ஆத்திரமடைந்த அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் 2:30 மணியளவில் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை முன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த கள்ளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்ததைத் தொடர்ந்து 2:45 மணிக்கு மறியலை கைவிட்டனர்.
