/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மாநில தேர்தல் ஆணையத்தின் கடிதத்தால் நிம்மதி! உள்ளாட்சி பிரதிநிதிகளின் குழப்பம் தீர்ந்தது
/
மாநில தேர்தல் ஆணையத்தின் கடிதத்தால் நிம்மதி! உள்ளாட்சி பிரதிநிதிகளின் குழப்பம் தீர்ந்தது
மாநில தேர்தல் ஆணையத்தின் கடிதத்தால் நிம்மதி! உள்ளாட்சி பிரதிநிதிகளின் குழப்பம் தீர்ந்தது
மாநில தேர்தல் ஆணையத்தின் கடிதத்தால் நிம்மதி! உள்ளாட்சி பிரதிநிதிகளின் குழப்பம் தீர்ந்தது
ADDED : செப் 11, 2024 11:07 PM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டம் உள்ளிட்ட புதியதாக தோற்றுவிக்கப்பட்ட 9 மாவட்டங்களின்உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளின் பதவிகாலம் தொடர்பான பெரும் குழப்பங்களுக்குமாநில தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள கடிதத்தால் தெளிவு கிடைத்தது.
தமிழகத்தில் கடந்த 2019ம் ஆண்டு சில மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டது. இதனால் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி உட்பட 9 மாவட்டங்களை தவிர்த்து, மற்ற 29 மாவட்டங்களில் உள்ள ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சிகளுக்கு 2019ல் தேர்தல் நடத்தப்பட்டது.
புதிதாக உருவாக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களுக்கு, 2021ல் தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், வார்டு வரையறை செய்யப்பட்டு, ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, 2022ல் தேர்தல் நடந்தது. கடந்த 2019ல் தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் பதவி காலம், வரும் டிசம்பரில் நிறைவடைகிறது. புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில், தேர்வான மக்கள் பிரதிநிதிகளின் பதவிக்காலம் வரும் 2026ல் நிறைவடைகிறது.
இந்நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு மாநில தேர்தல் ஆணையம் தயாராகி வரும் நிலையில், கடந்த 2019ல் தேர்தல் நடந்த பதவிகளுக்கு மட்டும் தற்போது தேர்தல் நடத்தப்படுமா அல்லது 2021ல் தேர்தல் நடத்தப்பட்ட ஒன்பது மாவட்டங்களுக்கும் சேர்த்து தேர்தல் நடத்தப்படுமா என்று உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளிடையே குழப்பம் நிலவியது. இன்னும் இரண்டு ஆண்டுகள் பதவிக்காலம் உள்ள நிலையில், தங்கள் பதவியை கலைத்து, தேர்தல் நடத்த அரசு ஏற்பாடு செய்து விடுமோ என ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் பீதி அடைந்தனர்.
இந்நிலையில், கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற தங்களது பதவி காலம் 2024-வுடன் முடிவடைய உள்ளதாக செய்தி வருகின்றது. தங்களது பதவிக்காலத்தை பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் படி 5 ஆண்டுகள் வரை தொடர்ந்திட ஆவணம் செய்ய வேண்டும் என மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்திற்கு கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் மனுக்கள் அனுப்பினர்.
இதனையடுத்து மாநில தேர்தல் ஆணைய செயலர் பாலசுப்ரமணியம், கடந்த 2021ம் ஆண்டு தேர்தல் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பதவிக்காலம் 2026ம் ஆண்டு அக்.,19ம் தேதி முடிவடைகிறது. பதவி காலம் குறித்து ஊராட்சி தலைவர்களுக்கு ஐயம்(சந்தேகம்) ஏற்படாமல் இருக்க விழிப்புணர்வு ஏற்படுத்துமாறும், குழப்பம் அடைய வேண்டாம் என்றும் அறிவுறுத்துமாறு கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் பிரசாந்துக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கலெக்டர் பிரசாந்த், பதவி காலம் தொடர்பான சந்தேகங்களை போக்கும் பொருட்டு, ஊராட்சி மன்ற தலைவர்களை அழைத்து கூட்டம் நடத்தி மாநில தேர்தல் ஆணைய செயலரின் கடிதத்தை படித்து காண்பித்து விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளார்.
பதவி காலம் தொடர்பாக கடந்த சில மாதங்களாக பெரும் குழப்பத்தில் இருந்த நிலையில், தற்போது மாநில தேர்தல் ஆணைய செயலரின் கடிதம், கள்ளக்குறிச்சி மாவட்ட உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மட்டுமின்றி மற்ற மாவட்டங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளையும் நிம்மதி அடைய செய்துள்ளது.