ADDED : ஜூலை 12, 2025 03:45 AM
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
உளுந்துார்பேட்டை அடுத்த எம்.குன்னத்துார் நடுத்தெரு பகுதிக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குழாயில் பழுது ஏற்பட்டது. இதனால் கடந்த சில மாதங்களாக அப்பகுதிக்கு குடிநீர் வினியோகம் இல்லை. குடிநீர் குழாயை சீரமைத்து குடிநீர் விநியோகிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் ஊராட்சி மற்றும் பி.டி.ஓ., அதிகாரிகளிடம் முறையிட்டனர்.
ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அதிருப்தியடைந்த அப்பகுதி மக்கள் நேற்று காலை 7.45 மணிக்கு, உளுந்துார்பேட்டை - குன்னத்தூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த திருநாவலுார் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து குடிநீர் உடனடியாக வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து காலை 8.30 மணிக்கு, சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.