ADDED : நவ 22, 2026 03:54 PM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகளுக்கு ‘ஆட்டுக்கொல்லி’ நோய் தடுப்பூசி இலவசமாக செலுத்தும் பணி இன்று துவங்குகிறது.
கலெக்டர் பத்மஜா செய்திக்குறிப்பு:
வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகளை ஆட்டுக்கொல்லி எனப்படும் வைரஸ் நோய் தாக்கும். இந்த நோயால் பாதித்த ஆடுகள் அதிக காய்ச்சல், சளி, கண்களில் நீர் வடிதல், கழிச்சல் போன்ற அறிகுறிகளுடன் காணப்படும்.
இந்நோய் 90 சதவீத இறப்பை ஏற்படுத்துவதால் ஆடு வளர்ப்போருக்கு அதிக பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. இந்நோயை ஒழிக்கும் பொருட்டு கால்நடை சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்திட்டத்தின் கீழ் அனைத்து ஆடுகளுக்கும் ஒரு வருடத்திற்கு ஒரு முறை வீதம் தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்தப்படும்.
அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று முதல் டிசம்பர் 24ம் தேதி வரை அனைத்து வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகளுக்கு இலவசமாக ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெறுகிறது.
இதற்காக ஒரு லட்சத்து 75 ஆயிரம் தடுப்பூசி மருந்துகள் பெறப்பட்டுள்ளது. மருத்துவ குழுக்கள் அமைத்து கிராம அளவில் முகாம் அமைத்து தடுப்பூசி செலுத்தப்படும். எனவே, 4 மாதங்களுக்கு மேற்பட்ட, கருவுறாத வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகளுக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்தி ஆடு வளர்ப்பவர்கள் பயன்பெறலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
