/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
உளுந்துார்பேட்டை பகுதியில் மணல் கொள்ளை... அதிகரிப்பு; போலீஸ், வருவாய்த்துறை கண்டுகொள்ளாத அவலம்
/
உளுந்துார்பேட்டை பகுதியில் மணல் கொள்ளை... அதிகரிப்பு; போலீஸ், வருவாய்த்துறை கண்டுகொள்ளாத அவலம்
உளுந்துார்பேட்டை பகுதியில் மணல் கொள்ளை... அதிகரிப்பு; போலீஸ், வருவாய்த்துறை கண்டுகொள்ளாத அவலம்
உளுந்துார்பேட்டை பகுதியில் மணல் கொள்ளை... அதிகரிப்பு; போலீஸ், வருவாய்த்துறை கண்டுகொள்ளாத அவலம்
ADDED : ஆக 23, 2025 05:35 AM

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை பகுதியில் ஏரி, குளம், ஆற்று பகுதிகளில் மண், மணல் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். உளுந்துார்பேட்டை நகராட்சியில் 24 வார்டுகளும், ஒன்றியத்தில் 53 ஊராட்சிகளும் உள்ளன. திருநாவலுார் ஒன்றியத்தில் 44 ஊராட்சி உள்ளது. அப்பகுதிகளில் குடிநீர் மற்றும் விவசாய தேவைகளுக்காகவும் ஏரி, குளங்கள் வெட்டப்பட்டு தண்ணீர் சேமிக்கும் இடமாக இருந்தன. உளுந்துார்பேட்டை அடுத்த கெடிலம் அருகே தென்பெண்ணை ஆறு, சேஷ நதி ஆற்றின் மூலம் ஏரிகளுக்கு தண்ணீர் செல்லும் வகையில் நீர் வரத்து வாய்க்கால் உள்ளது.
ஏரி, குளம் உள்ளிட்ட நீர் நிலைகளில் தண்ணீர் தேங்கி நிற்கும்போது, நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, விவசாயத்திற்கு பெரிதும் உதவியாக இருந்தது. ஆனால் கடந்த பல ஆண்டுகளாக சரியான நேரத்தில் பருவ மழை பெய்யாததால் ஏரி, குளங்களில் தண்ணீர் இல்லாமால் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஆண்டின் பெரும்பாலன மாதங்கள் நீர் நிலைகளில் தண்ணீர் தேங்கி நிற்காததால், ஆக்கிரமிப்பாளர்களால் ஏரி, குளங்கள், ஆறுகளின் பரப்பளவு குறைந்து வருகிறது. அவ்வாறு ஆக்கிரமிக்கும் நபர்கள், ஏரி, குளங்களில் உள்ள மண்ணை வெட்டி எடுத்து கடத்தி விற்பனை செய்து வருகின்றனர். ஏரி குளங்களில் இரவு பகல் பாராமல் 24 மணி நேரமும் மண் கடத்தல் நடந்து வருகிறது.
கடந்த காலத்தில் திரை மறைவில் மண் மற்றும் மணல் கடத்தல் நடந்து வந்தது. ஆனால், கடந்த 4 ஆண்டுகளாக ஆறு, ஏரி, குளத்தில் எந்தவித முதலீடும் இன்றி, கட்சி பிரமுகர்கள் என்ற போர்வையில் மண் கடத்தல் ஜரூராக நடக்கிறது. ஒரு டிப்பர் டிராக்டர் மண் ரூ. 5 முதல் 7 ஆயிரம் வரையிலும் விற்பனை செய்கின்றனர். இதனால், மற்ற கட்சி பிரமுகர்களும் போட்டி போட்டுக் கொண்டு மண் கடத்தலில் ஈடுபடுகின்றனர்.
ஆறுகளில் மணல் திருட்டு சர்வ சாதாரணமாக நடக்கிறது. ஆற்றில் அள்ளப்படும் ஒரு லோடு மணல் ரூ. 50 முதல் ரூ. 60 ஆயிரம் வரை விற்பனை செய்கின்றனர். தொடர்ந்து ஏரி, குளங்கள், ஆறுகளில் நடக்கும் மண் மற்றும் மணல் கொள்ளையால் ஏரிகளில் பல அடி உயரத்திற்கு பள்ளம் உருவாக்கி உள்ளனர்.
மண், மணல் கொள்ளையை தடுக்க வேண்டிய போலீஸ்,, வருவாய்த் துறையினர் இதனை கண்டுகொள்வதில்லை. இதனால் மண், மணல் கொள்ளை உளுந்துார்பட்டை, திருநாவலுார் பகுதியில் ஜரூராக நடந்து வருகிறது. மண் மணல் கொள்ளையை தடுத்து, இயற்கை வளங்களை பாதுகாக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.