/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
துாய்மை பணியாளர்கள் வேலைநிறுத்த போராட்டம்
/
துாய்மை பணியாளர்கள் வேலைநிறுத்த போராட்டம்
ADDED : நவ 04, 2025 01:08 AM
கள்ளக்குறிச்சி:  கள்ளக்குறிச்சியில் கோரிக்கைகளை வலியுறுத்தி துாய்மைப் பணியாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. இப்பகுதியில் நிரந்தர மற்றும் ஒப்பந்த முறை அடிப்படையில் துாய்மை பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இதில், 'அவுட்சோர்சிங்' ஒப்பந்த முறையில் 120 பேர் தற்காலிகமாக பணிபுரிகின்றனர். இவர்களுக்கு பிடித்தம் போக மாத ஊதியமாக 10 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்படுகிறது.
ஒப்பந்த முறையில் பணிபுரிபவர்களை கண்காணித்து ஊதியம் வழங்குவதற்காக ஏற்கனவே இருந்த நிறுவனத்தின் டெண்டர் காலம் முடிவடைந்தது. தற்போது, நவம்பர் 1ம் தேதியில் இருந்து புதிய நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் தற்காலிக துாய்மை பணியாளர்கள் பணிபுரிய வேண்டும்.
பழைய நிறுவனத்தின் டெண்டர் காலத்தின் போது, துாய்மைப் பணியாளர்களின் சம்பள தொகையில் பிடித்தம் செய்த பி.எப்., தொகை பல மாதங்களாக வழங்கப்படாத நிலையில், புதிய நிறுவனம் மாற்றப்பட்டுள்ளது. எனவே, தங்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும். சுழற்சி முறையில் வாரத்திற்கு ஒரு நாள் விடுப்பு அளிக்க வேண்டும்.
பழைய நிறுவனத்தில் பிடித்தம் செய்து, நீண்ட மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள பி.எப்., பணத்தை வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 70க்கும் மேற்பட்ட துாய்மைப் பணியாளர்கள் கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பு பகுதியில் நேற்று காலை 6 மணியளவில் திரண்டு, வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்தனர்.
தகவலறிந்த நகராட்சி கமிஷனர் சரவணன் சம்பவ இடத்திற்குச் சென்று, கோரிக்கைகள் தொடர்பாக நகராட்சி அலுவலகத்தில் பேசி தீர்வு காணலாம் என தெரிவித்தார். அதன்பேரில், துாய்மைப் பணியாளர்கள் காலை 6:35 மணியளவில் கலைந்து பணிக்குச் சென்றனர்.

