/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ரேஷன் கடைகளில் கூடுதலாக மளிகை பொருட்கள் விற்க அறிவுறுத்தல் மன உளைச்சலில் விற்பனையாளர்கள்
/
ரேஷன் கடைகளில் கூடுதலாக மளிகை பொருட்கள் விற்க அறிவுறுத்தல் மன உளைச்சலில் விற்பனையாளர்கள்
ரேஷன் கடைகளில் கூடுதலாக மளிகை பொருட்கள் விற்க அறிவுறுத்தல் மன உளைச்சலில் விற்பனையாளர்கள்
ரேஷன் கடைகளில் கூடுதலாக மளிகை பொருட்கள் விற்க அறிவுறுத்தல் மன உளைச்சலில் விற்பனையாளர்கள்
ADDED : நவ 18, 2024 10:59 PM
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 766 பகுதி மற்றும் முழு நேர ரேஷன் கடைகள் உள்ளன. ரேஷன் கார்டுதாரர்களுக்கு அரிசி இலவசமாகவும், பருப்பு, மண்ணெண்ணெய், சமையல் எண்ணெய், கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மலிவு விலையிலும் ரேஷன்கடை மூலம் வழங்கப்படுகிறது.
ஏ.ஏ.ஒய்., - பி.ஹெச்.ஹெச்., - என்.பி.ஹெச்.பிஹெச்., சர்க்கரை மட்டும் மற்றும் கவுரவ அட்டை என 5 வகையில், 4 லட்சத்து 37 ஆயிரத்து 256 ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையை பொறுத்து மக்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்களின் எடை மற்றும் அளவு மாறுபடும்.
ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் மட்டுமின்றி, கட்டுப்பாடற்ற பொருட்களான உப்பு, டீ துாள், சாம்பார் பொடி, சோப்பு வகைகள், மசாலா பொடிகள், பெருங்காயம், என 30க்கும் மேற்பட்ட மளிகை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த கட்டுப்பாடற்ற கூடுதல் மளிகை பொருட்களை வாங்கவேண்டுமென பொதுமக்களை கட்டாயப்படுத்தக் கூடாது என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், சில மாதங்களாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு அதிகளவிலான கூடுதல் மளிகைப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. அவ்வாறு வரும் பொருட்களை விற்கமுடியவில்லை. பொதுமக்கள் வாங்க மறுக்கிறார்கள் என காரணம் கூறி திருப்பி அனுப்பக்கூடாது எனவும் விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனால், மளிகை பொருட்களுக்கான மொத்த தொகையையும் செலுத்த வேண்டிய நிர்பந்தம் ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு உள்ளது.
விற்பனையாகாத பொருட்களுக்கு சொந்த பணத்தை செலுத்த வேண்டிய நிலை இருப்பதால், விற்பனையாளர்கள் வேறு வழியின்றி கூடுதல் பொருட்களை வாங்க வேண்டும் என பொதுமக்களை கட்டாயப் படுத்துகின்றனர்.
ரேஷன் கடைகளில் வழங்கப்படும் மளிகை பொருட்களின் தரம் குறைவாக இருப்பதாக கருதும் பொதுமக்கள், இதுபோன்ற மளிகை பொருட்களை வாங்க மறுக்கின்றனர்.
இதனால், பல இடங்களில் ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே தகராறு ஏற்படுகிறது. இதனை சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்புவதால், தங்களுக்கு அவப்பெயர் ஏற்படுவதாக தெரிவித்து ரேஷன் விற்பனையாளர்கள் மன உளைச்சலில் உள்ளனர்.
எனவே, ரேஷன் கடைகளுக்கு அனுப்பபடும் மளிகைப் பொருட்களின் எண்ணிக்கையை குறைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விற்பனையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.