ADDED : ஆக 29, 2026 05:50 PM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் இ–கே.ஒய்.சி., பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் நேற்று நடந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 766 பகுதி மற்றும் முழு நேர ரேஷன்கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகிறது.
இதில், ஏ.ஏ.ஒய்., வகை ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு 35 கிலோ எடையுள்ள அரிசியும், பி.எச்.எச்., கார்டு வைத்திருப்பவர்களுக்கு தலா 5 கிலோ அரிசியும் வழங்கப்படுகிறது.
இந்த இரு வகை ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கப்படும் உணவுப்பொருட்களுக்கு மத்திய அரசு முழு மானியம் வழங்குகிறது.
இதனால் இந்த இரு வகை கார்டுதாரர்களும் அத்தியாவசிய பொருட்கள் பெற்று பயன்பெறுவதை உறுதி செய்வதற்காக, ரேஷன்கார்டில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் கைரேகை அல்லது கருவிழியை பதிவு செய்ய
அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இதுவரை 96.13 சதவீத நபர்களின் கைரேகைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் விடுபட்ட நபர்கள் கைரேகையை பதிவு செய்வதற்கான சிறப்பு இ–கே.ஒய்.சி., முகாம் அனைத்து ரேஷன் கடைகளிலும் நேற்று நடந்தது.
இதில், 1,510 பேர் ரேஷன் மற்றும் ஆதார் கார்டுடன் முகாமில் பங்கேற்று பி.ஓ.எஸ்., கருவியில் தங்களது கைரேகையினை பதிவு செய்தனர்.
மணலுார்பேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கட்டுப்பாட்டில் உள்ள ரேஷன்கடையில் நடந்த முகாமினை கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதேபோல், கூட்டுறவு சங்க துணைப்பதிவாளர், சார் பதிவாளர்கள், முதுநிலை ஆய்வாளர்கள் பல்வேறு கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
