தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப மாநில ஒருங்கிணைப்பு குழு கோரிக்கை
தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப மாநில ஒருங்கிணைப்பு குழு கோரிக்கை
ADDED : ஜூன் 05, 2026 05:48 AM
திருக்கோவிலுார்: தமிழகத்தில் அரசு பள்ளிகளில் காலியாக இருக்கும் தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதுடன், பதவி உயர்வை வழங்க வேண்டும் என மாநில ஒருங்கிணைப்பு குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி சட்டம் படி, ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றிருந்தால் மட்டுமே, ஆசிரியர்கள் பதவி உயர்வு மற்றும் புதிய பணி நியமனம் செய்ய முடியும் என தேசிய ஆசிரியர் கல்வி நிறுவனம் என்.சி.டி.இ., விதிமுறையை வகுத்திருந்தது.
அதன்படி டி.இ.டி., எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வை தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வாணையம் நடத்தி வருகிறது.
இதனை எதிர்த்து பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் நீதிமன்றங்களை நாடிய நிலையில் ஆர்.டி.இ., சட்டத்தை உறுதி செய்தவுடன் என்.சி.டி., (தேசிய ஆசிரியர் கல்வி நிறுவனம்) வகுத்த வரைமுறையை பின்பற்றவும் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது தொடக்கக் கல்வித் துறை சார்பில் நீதிமன்றங்களில் வழக்கு எதுவும் நிலுவையில் இல்லாத சூழலில், டி.இ.டி., தேர்வில் வெற்றி பெற்று பணியாற்றி வரும் அரசு பள்ளி ஆசிரியர்கள் 40 ஆயிரம் பேர் உள்ளனர்.
அவர்களை 2022ம் ஆண்டு முதல், ஆண்டு வாரியாக பதவி உயர்வுக்கு தகுதி உள்ளோரின் முன்னுரிமை பட்டியலை தயார் செய்து, அதன் அடிப்படையில் துவக்க, நடுநிலை, உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.
மேலும் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். இதன் மூலம் மாணவர்களின் தேர்ச்சி சதவீத பாதிப்பு குறைக்கப்படும் என ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான மாநில ஒருங்கிணைப்பு குழு வலியுறுத்தியுள்ளது.
