/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
துணை மின் நிலையத்தை தரம் உயர்த்த நடவடிக்கை... தேவை: திருக்கோவிலுார் பகுதி கிராம மக்கள் கோரிக்கை
/
துணை மின் நிலையத்தை தரம் உயர்த்த நடவடிக்கை... தேவை: திருக்கோவிலுார் பகுதி கிராம மக்கள் கோரிக்கை
துணை மின் நிலையத்தை தரம் உயர்த்த நடவடிக்கை... தேவை: திருக்கோவிலுார் பகுதி கிராம மக்கள் கோரிக்கை
துணை மின் நிலையத்தை தரம் உயர்த்த நடவடிக்கை... தேவை: திருக்கோவிலுார் பகுதி கிராம மக்கள் கோரிக்கை
ADDED : டிச 30, 2025 07:05 AM

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் மற்றும் சுற்று வட்டார கிராமங்களின் மின் தேவையை கருத்தில் கொண்டு திருக்கோவிலுார் துணை மின் நிலையத்தை தரம் உயர்த்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருக்கோவிலுார் துணை மின் நிலையம் 25 எம்.வி.ஏ., மற்றும் 16 எம்.வி.ஏ., திறன் கொண்ட துணை மின் நிலையமாக உள்ளது. இங்கிருந்து 7 வழித்தடங்களில் நுாற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின் விநியோகம் செய்யப்படுகிறது. மாடாம்பூண்டி, அருதங்குடி என பல வழி தடங்கள் 15 கி.மீ., துாரத்தையும் கடந்து மின் பாதைகள் செல்வதால் கூவனுார், மிலாரிப்பட்டு, அருதங்குடி, சித்தாமூர் என வெகு துாரத்தில் இருக்கும் 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு முழு அளவில் மின்சாரம் சென்று சேர்வதில்லை.
இதன் காரணமாக தேவரடியார்குப்பம் துணை மின் நிலையத்திலிருந்து அருகில் இருக்கும் கூவனுார் உள்ளிட்ட கிராமங்களுக்கு மின் விநியோகம் செய்யப்பட்டது. கடந்தாண்டு பெய்த மழை வெள்ளத்தில் தென்பெண்ணை ஆற்றில் நடப்பட்டிருந்த மின் கம்பம் அடித்துச் செல்லப்பட்டதால் மீண்டும் திருக்கோவிலுார் துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் மின்சாரமே இப்பகுதிக்கு வழங்கப்படுகிறது.
இதன் காரணமாக பல கிராமங்களில் விவசாயம் பாதிக்கப்பட்டிருப்பதுடன், வீடுகளிலும் குறைந்த மின்னழுத்தம் காரணமாக மின்சாதனங்கள் பழுதடைவதும், அவ்வப்பொழுது மின்தடை என்பது சர்வ சாதாரணமாக உள்ளது.
தற்போது செங்கணாங்கொல்லையில் புதிய துணை மின் நிலையம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இது செயல்பாட்டிற்கு வந்தாலும் போதுமான மின்சாரத்தை திருக்கோவிலுார் துணை மின் நிலையத்திலிருந்து கொடுக்க முடியாது என மின்வாரி ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
இக்குறையைப் போக்க 230 கே.வி.ஏ. திறன் கொண்ட (கிரிட்) துணை மின் நிலையமாக தரம் உயர்த்த வேண்டும் அல்லது திருக்கோவிலுார் துணை மின் நிலையத்தில் இருக்கும் 16 எம்.வி.ஏ., திறன் கொண்ட டிரான்ஸ்பார்மரை 25 எம்.வி.ஏ., டிரான்ஸ்பார்மராக மாற்றி கூடுதலாக ஒரு 25 எம்.வி.ஏ., திறன் கொண்ட டிரான்ஸ்பார்மர் நிறுவ வேண்டும். இவ்வாறு செய்தால் மட்டுமே திருக்கோவிலுார் பகுதியில் அதிகரித்து வரும் மின் தேவையை எதிர்காலத்தில் சமாளிக்க முடியும்.
பல தொழில் முனைவோர் திருக்கோவிலுார் சுற்று வட்டார பகுதிகளில் சோலார் மின் நிலையங்களை உருவாக்கி வருகின்றனர். இதனை உள்வாங்குவதற்கும், திருக்கோவிலுார் துணை மின் நிலையத்தை மேம்படுத்துவது அவசியம்.
மேலும் மாடம்பூண்டி, சித்தலிங்கமடம் உள்ளிட்ட இடங்களில் புதிதாக துணை மின் நிலையங்களை நிறுவ வேண்டும். தற்போதைய சூழலில் திருக்கோவிலுார் துணை மின் நிலையத்தை கூடுதல் திறன் கொண்டதாக மேம்படுத்த வேண்டியது அவசர அவசியமாகியுள்ளது.
அவ்வாறு மேம்படுத்துவதன் மூலம் திருக்கோவிலுார் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகரித்துவிட்ட மின் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய முடியும். கிராம பகுதிகளில் ஏற்படும் மின்தடை மற்றும் குறைந்த அழுத்த மின் விநியோகத்திற்கு தீர்வு கிடைக்கும்.
தொழிற்சாலைகள் தொடங்கவும் வாய்ப்பு ஏற்படும். இதன் காரணமாக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் திருக்கோவிலுார் துணைமின் நிலையத்தை மேம்படுத்த கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

