மாணவர்கள் கல்வி உதவித் தொகை விண்ணப்பங்கள் வரவேற்பு
மாணவர்கள் கல்வி உதவித் தொகை விண்ணப்பங்கள் வரவேற்பு
UPDATED : நவ 02, 2026 07:11 PM
ADDED : நவ 02, 2026 07:06 PM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியோர் மற்றும் சீர்மரபினர் பிரிவு பள்ளி மாணவ, மாணவியர்கள் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.
கலெக்டர் பத்மஜா செய்திகுறிப்பு:
மத்திய அரசு இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியோர் மற்றும் சீர்மரபினர் பிரிவைச் சேர்ந்த மாணவ, மாணவியர்களுக்கு பிரதம மந்திரியின் கல்வி உதவித் தொகை உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நடப்பாண்டில் 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியர், https://scholarships.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
இத்திட்டத்தில் கல்வி மற்றும் விடுதிக் கட்டணமாக, 9 மற்றும் 10ம் வகுப்பு பயில்வோருக்கு 75 ஆயிரம், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பயில்வோருக்கு 1.25 லட்சம் ரூபாய் வரை உதவித்தொகை வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் மாணவர்கள் இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியோர் அல்லது சீர்மரபினர் பிரிவு சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் 2.50 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
கடந்த கல்வியாண்டில் (2025 – 26) 100 சதவீத தேர்ச்சி பெற்ற, மத்திய அரசால் வெளியிடப்பட்ட பட்டியலில் இடம் பெற்ற பள்ளிகளில் பயில்பவராக இருக்க வேண்டும்.
கடந்த ஆண்டு கல்வி உதவித்தொகை பெற்றவர்கள், கல்வி உதவித்தொகை இணையதளத்தில் தங்களது விவரங்களை உறுதி செய்து புதுப்பித்துக் கொள்ள வேண்டும். விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து வரும் 30ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தினை கல்வி நிறுவனங்கள் வரும் டிசம்பர் 15ம் தேதிக்குள் சரிபார்க்க வேண்டும்.
புதிதாக விண்ணப்பிக்கும் மாணவர்கள் https://scholarships.gov.in இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். பட்டியலிடப்பட்ட பள்ளிகளின் விவரங்களை தலைமையாசிரியர்கள், சி.இ.ஓ., மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர்களை தொடர்பு கொண்டு அறியலாம். கூடுதல் விவரங்களைப் பெற, https://scholarships.gov.in அல்லது மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் http://socialjustice.gov.in தொடர்பு கொள்ளலாம்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியான மாணவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் உள்ளது.
