UPDATED : நவ 02, 2026 06:46 PM
ADDED : நவ 02, 2026 06:41 PM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெரும்பாலான டாஸ்மாக் கடைகள் ஒன்றரை மணி நேரம் தாமதமாக திறக்கப்பட்டது.
தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் 1000 ரூபாய்க்கு மேல் மதுபாட்டில்கள் வாங்கும் நபர்களிடம் ரொக்கமாக பணம் பெறக்கூடாது, மாறாக யு.பி.ஐ., கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு உள்ளிட்ட ஆன்லைன் மூலமாக பணம் பெற வேண்டும், மதுபாட்டில்களை திரும்ப பெறும் போது ஸ்கேன் செய்ய வேண்டும் உள்ளிட்ட புதிய நடைமுறைகள் நேற்று முன்தினம் அமலுக்கு வந்தது.
இந்த புதிய நடைமுறையால் பணிச்சுமை அதிகரித்திருப்பதாகவும், ஆன்லைன் மூலமாக பணம் பெறுவதில் சிக்கல் இருப்பதால் மதுபிரியர்கள் தகராறில் ஈடுபடுவதாகவும் கூறி டாஸ்மாக் ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த நடைமுறைகளை திரும்ப பெறக்கோரி நேற்று முன்தினம் மாலை டாஸ்மாக் கடைகளை திடீரென மூடி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால், டாஸ்மாக் வருவாய் பெருமளவு பாதிக்கப்பட்டதுடன், மதுபிரியர்கள் கடும் சிரமமடைந்தனர்.
இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான டாஸ்மாக் கடைகள் நேற்று மதியம் 12:00 மணிக்கு மேலாகியும் திறக்கப்படாமலேயே இருந்தது. பணிக்கு செல்லலாமா அல்லது போராட்டத்தை தொடரலாமா என்ற ஆலோசனையில் டாஸ்மாக் ஊழியர்கள் ஈடுபட்டனர். தொடர்ந்து, சங்க உயர்மட்ட நிர்வாகிகளின் அறிவுறுத்தலின் பேரில், மதியம் 1.30 மணிக்கு மேல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.
